மகேஷ்பாபு நடிக்கும் ‘குண்டுர் காரம்’ (GunturKaaram) பட வீடியோவை அவரது தந்தை கிருஷ்ணாவின் பிறந்தநாளையொட்டி படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் ‘சர்காரு வாரி பாட்டா’. இந்தப் படத்தைத் தொடர்ந்து மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்துக்கு ‘குண்டுர் காரம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அல்லு அர்ஜூனை வைத்து ‘ஆலா வைகுந்தபுரமுலோ’ படத்தை இயக்கிய த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார்.
ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஸ்ரீலீலா, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யாகிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படம் அடுத்த ஆண்டு ஜனவரி 13-ம் தேதி சங்கராந்திக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மகேஷ்பாபுவின் தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு ‘குண்டுர் காரம்’ படத்தின் க்ளிம்ப் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதில் தலையில் தலைப்பாகை கட்டிக்கொண்டு கையில் குச்சி ஒன்றை சுழற்றியபடியே இன்ட்ரோ கொடுக்கிறார் மகேஷ்பாபு. அடுத்து என்ன வழக்கம்போல எதிரிலிருப்பவருக்கு அடி தான். அடுத்த ஷாட்டில் ‘சிவகாசி’ படத்தில் விஜய்க்கு கொடுக்கும் இன்ட்ரோ போல ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. அடுத்துதான் ஒரு மாஸ் ஹீரோ என்பதைக் காட்ட பீடியை ஸ்டைலாக பற்றவைக்க பின்னாலிருக்கும் ஜீப் ஒன்று பறக்கிறது. பான் இந்தியா காலத்தில் இப்படியான க்ளிம்ஸ் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. க்ளிம்ஸ் வீடியோ: