இந்திய திரைப்படங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்ததற்கு எனது வாழ்த்துகள் என நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள செங்களம் வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்த வெப் சீரிஸின் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன், இயக்குநர் அமீர், வாணி போஜன், டேனியல், விஜி சந்திரசேகர், பிரேம், கஜராஜ், இசை அமைப்பாளர் தரண் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வரும் 24 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் இந்த தொடர் வெளியாக உள்ளது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் அமீர், தான் ஆதிபகவன் படம் இயக்கும்போது சிவப்பு கம்பளம் என்ற படத்தை என்னை வைத்து இயக்க எஸ்ஆர்.பிரபாகரன் முன்வந்தார் என தெரிவித்தார். மேலும் இந்த விழாவிற்கு வந்ததன் முதல் காரணம் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் என்றும், அக்கதையில் எனக்கு உடன்பாடு இல்லாததால் நான் நடிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனக்கு அரசியல் ரொம்ப பிடிக்கும். உயிர் தமிழுக்கு என்ற அரசியல் த்ரில்லர் படம் எடுத்து வருகிறேன் என அமீர் கூறியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமீர், இந்திய திரைப்படங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்ததற்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். கலைக்கு அரசியல் கிடையாது. அந்த வகையில் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்திருப்பது பெருமை. ஆனால் என்னை பொறுத்தவரையில் ஆஸ்கார் விருது பெரிய விருது என்று என்றைக்கும் நான் நினைத்தது இல்லை. அது எல்லோராலும் பார்க்கப்படுவதால் முக்கியத்துவம் பெறுகிறது அவ்வளவு தான். அதனை அந்த நாட்டின் தேசிய விருது என்று நினைத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கேயும் இந்திய படங்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது எனக்கு கிடைத்தது போன்று நினைத்துக்கொள்கிறேன். எனக்கு தெரிந்து ஒரு 30 ஆண்டுகளுக்கு முன் விருதுகளுக்கான அங்கீகாரம் வேறு. இப்போது எல்லா விருதுகளிலும் அரசியல் உள்ளது. தேசிய விருது, மாநில‌ விருது , தனியார் நடத்தும் விருது இப்படி எல்லாவற்றிலும் அரசியல் உள்ளது. இந்தியாவிலேயே மிகச் சிறந்த நடிகர் சிவாஜி கணேசன். ஹாலிவுட் நடிகர்களே அவரிடம் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள விரும்பினர். ஆனால் அவருக்கு ஒரு தேசிய விருது கூட வழங்கப்படவில்லை. இங்கு அப்படித்தான் இருக்கிறது. விருதுகள் எல்லாமே லாபிதான் என கடுமையாக விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அமீர், நான் ஒருபோதும் கட்சி தொடங்க மாட்டேன். ஆனால் மரணிக்கும் வரை அரசியல் பேசுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.