தமிழில், ‘ஆரம்பம்’, ‘பெங்களூர் நாட்கள்’, ‘இஞ்சி இடுப்பழகி’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர், தெலுங்கு நடிகர் ராணா. ‘பாகுபலி’படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார்.
இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் உடல்நலப் பிரச்னை ஏற்பட்டது. சமீபத்தில் அளித்த பேட்டியில், அது பற்றி பேசிய அவர், கருவிழி மாற்று அறுவைச் சிகிச்சைச் செய்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, “எனக்கு கண்ணில் பிரச்சினை. என் வலது கண்ணால் பார்க்க முடியாது. கருவிழி மாற்று அறுவைச் சிகிச்சைச் செய்துகொண்டேன். பின்னர் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையும் செய்யப்பட்டது. இருந்தாலும் நான் ‘டெர்மினேட்டர்’ போல இருக்கிறேன். நம்பிக்கையை விடவில்லை. சிலர் உடல் நலப்பிரச்சினைகளால் உடைந்துவிடுகிறார்கள். அது தேவையில்லை” என்றார்.