தமிழ் சினிமாவில் நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தன் கலகலப்பான நடிப்பால் கவனமீர்த்தவர் நடிகர் மயில்சாமி.

<robust>மகா கலைஞன் மயில்சாமி:</robust>

மிமிக்ரி கலைஞராக தன் சினிமா பயணத்தைத் தொடங்கிய மயில்சாமி, தமிழ் சினிமாவில் படிப்படியாக வளர்ந்து கோலிவுட் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள நிலையில், கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி அதிகாலை தன் 57 வயதில் யாரும் எதிர்பாராத வகையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

மயில்சாமியின் இறப்பு தமிழ் சினிமாத்துறையினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நடிகர்கள், அரசியல் தலைவர்கள் தொடங்கி ரசிகர்கள் வரை அவருக்கு நேரிலும் சமூக வலைதளங்களிலும் அஞ்சலி செலுத்தினர்.

<robust>மயில்சாமி சம்பந்தி:</robust>

மயில்சாமி உயிரிழந்து சில வாரங்கள் கடந்துள்ள போதும் சினிமாத்துறையினர் பலரும் இன்னும் அதிர்ச்சியிலும் மீளாத்துயரிலும் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில், மயில்சாமியின் சம்பந்தியும் தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகருமான கு.பிச்சாண்டி முன்னதாக மயில்சாமி குறித்து வருத்ததுடன் பேசியுள்ளார்.

<robust>மயில்சாமியின் தன்னடக்கம்:</robust>

தனியார் ஊடகத்திடம் பேசிய கு.பிச்சாண்டி, ”எனது சம்பந்தி மயில்சாமி மிகவும் நல்ல மனிதர். என் மகளை அவரது வீட்டில் திருமணம் செய்துகொடுத்ததற்காகக் கூறவில்லை. மயில்சாமி உண்மையில் நல்ல மனது கொண்டவர், சம்பந்தி ஆவதற்கு முன்பே அவரைத் தெரியும்.

குடும்பத்தினரிடம் மரியாதை உடன் நடந்துகொள்வார். ஒரே மாதிரியாகவே அன்பை செலுத்துவார். மயில்சாமி என் சம்பந்தி என அதிகமாக நான் வெளியே காண்பித்துக் கொண்டதில்லை. ஏனென்றால் அவர் பெரிய நடிகர். அவரின் இழப்பு என் குடும்பத்துக்கு பெரும் இழப்பு” எனத் தெரிவித்துள்ளார்.

துணை சபாநாயகர் கு.பிச்சாண்டியின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், மயில்சாமியின் மகன் அருமைநாயகத்துக்கும் சென்ற 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

<robust>மாரடைப்பால் உயிரிழப்பு</robust>

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல அரசியல் தலைவர்களும் நடிகர்களும் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டனர். முன்னதாக மயில்சாமியின் உருவப் படத்தை அவர் இறுதியாக சிவராத்திரி அன்று பங்கேற்று வழிபட்ட கேளம்பாக்கம் மேகநாதீஸ்வரர் கோயில் கருவறையில் வைத்து வழிபட்டனர். மயில்சாமி இந்தக் கோயிலுக்கு பல ஆண்டுகாலமாக தொடர்ந்து சென்று வருவதாகவும், அவர் ஆன்மா சாந்தியடைய வழிபாடு நடத்துவதாகவும் முன்னதாக இதுகுறித்து கோயில் அர்ச்சகர் தெரிவித்திருந்தார்.

சென்னை, சாலிகிராமத்தில் வசித்து வந்த மயில்சாமி, சிவராத்திரி அன்று கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விட்டு அதிகாலை வீடு திரும்பிய நிலையில், சிறிது நேரத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர் தெரிவித்தனர்.

தொடர்ந்து வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடல் பிப்.20ஆம் தேதி வடபழனியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.