இளையராஜாவுடன் இசையிரவு 29 | ‘ஆகாய வெண்ணிலாவே’ – கிறங்கடிக்கும் ‘கிராஸ் ரிதம்’! | Ilayarajavudan Isai Iravu : Ahaya Vennilave Tune

இசைஞானி இளையராஜாவின் இசையில் கடந்த 1990-ம் ஆண்டு வெளிவந்த திரைப்பம் ‘அரங்கேற்ற வேளை’. இப்படத்தின் இயக்குநர் பாசில். பாசில்-இளையராஜா காம்போவில் வந்த திரைப்படங்கள் அனைத்துமே எவர்கிரீன் நினைவுகள் பொதிந்தவை. பூவே பூச்சூடுவா, பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, வருஷம் 16 திரைப்படங்களைத் தொடர்ந்து இளையராஜா – பாசில் காம்போவில் வந்த திரைப்படம்தான் இது. படத்தில் வரும் நான்கு பாடல்களில் ‘ஆகாய வெண்ணிலாவே’ பாடல் இன்றுவரை இசை ரசிகர்களின் பெட் டைம் பேஃவரைட் பாடல்.

ஒவ்வொரு முறை இந்தப் பாடல் கேட்கும்போதும் பாடல் கேட்பவர்களின் மனம் இளகிப் போகும். ராகதேவனின் இசைக்கேற்றபடி, இப்பாடலை கவிஞர் வாலி, சிற்பங்களைச் செதுக்குவது போல் செதுக்கியிருப்பார். ஒவ்வொரு வரியையும் எதுகை மோனையால் அடுக்கி பாடல் கேட்பவர்களை வானுயர பறக்கச் செய்திருப்பார். மரபு கவிதை போல் மனங்களைக் குளிரச் செய்திருக்கும் இந்தப் பாடலை ஜேசுதாஸுடன் இணைந்து உமா ரமணன் பாடியிருப்பார். அடர்த்தியான ஜேசுதாஸின் குரலோடு இணைந்து உமா ரமணன் பாடுவது, அசைவற்ற நீல வண்ணத்தில் மின்னி மறையும் வெள்ளிச்சிதறலைப் பார்ப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும்.

“ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ” என்று ஜேசுதாஸ் தொடங்க, “அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ” என்று உமா ரமணன் பின்தொடர்வார். அங்கிருந்து பாடலின் தொடக்க இசை ஆரம்பிக்கும். மென்மையான இந்தப் பாடலுக்கு வீணையை போல மிருதுவாக கிடாரை மீட்டியிருப்பார் இளையராஜா. அந்த மிருதுவான கிடாரும் அதன் உடன்சேரும் தபேலாவும் ஒன்றையொன்று கொஞ்சிக் கொள்ள, கொஞ்சம் பெல்ஸும் சேர்ந்து டைம்மிங் போட, பாடலின் பல்லவி தொடங்கியிருக்கும்.

“ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட” என்று பாடலின் பல்லவி வரிகளில் நிலவு, வானம், நட்சத்திரங்களை விவரிப்பது போல நாயகியை அழகான தமிழ் சொற்களைக் கொண்டு வர்ணித்திருப்பார் வாலி.

முதல் சரணத்துக்கு முன்வரும் இடையிசை வயலின்கள், புல்லாங்குழல், தபேலா கொண்டு இசைக்கப்பட்டிருக்கும். இந்தப்பாடல் ஒரு வயதானவர் மற்றும் நாயகன் நாயகியென மூவரும் அவர்களது பார்வையில் இருந்து நினைத்துப் பாடுவது போல படமாக்கப்பட்டிருக்கும். அதன்படி முதியவர் கற்பனையில் நாயகன் நாயகி பாடுவது போல் பாடல் தொடங்குவதால், பழைய காலத்தை நினைவுபடுத்தும் வகையிலேயே முதல் இடையிசையை ராஜா அமைத்திருப்பார். அதுவும் தொடக்கத்தில் வரும் ஒற்றை வயலின் பாடல் கேட்பவர்களின் மனங்களை சுக்குநூறாக்கிவிடும்.

இந்த கவுன்டர்பாயின்ட் இசை வடிவத்தை இந்த இசைக்கோர்ப்பில் உணரமுடியும். இருவேறு இசை குறிப்புகள் ஒரே நேரத்தில் இசைக்கப்படுவது கவுன்டர்பாயின்ட். இந்த வடிவத்தில் இசைக்கோர்ப்பு செய்வதில் ஆகச்சிறந்தவர் இசைஞானி. முதல் இடையிசையில், சோலா வயலின் ஒரு போக்கில் சென்று கொண்டிருக்க, ஒரு செட் ஆஃப் ஸ்ட்ரிங்ஸ் மற்றொரு இசைக்குறிப்புகளை இசைத்துக் கொண்டிருக்கும். இந்த இடையிசையின் இறுதியில் வரும் புல்லாங்குழல் டாப் நாட்சியாக பாடல் கேட்பவர்களை ரீங்கரித்திருக்கும். அங்கிருந்து பாடலின் முதல் சரணம் தொடங்கும்.

“தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் உண்டு

பூவாரம் சூடிக்கொண்டு தலை வாசல் வந்ததின்று

தென்பாண்டி மன்னன் என்று திரு மேனி வண்ணம் கண்டு

மாடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று

இளநீரூம் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்

கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்

கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட

நடு சாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட” என்ற வரிகளைக் கேட்கும் போதுதான் பாடல் கேட்பவர்களுக்கு Poetகளுக்கும், கவிஞருக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ள முடியும்.

இரண்டாவது சரணத்துக்கு முன்வரும் இடையிசையை கீபோர்டிலிருந்து ஞானியார் தொடங்கியிருப்பார். பாடலின் இப்பகுதி நாயகியின் பார்வையில் இருந்து வரும். கிடாருக்கு பேக்கப்பாக, அலை போல வீசிக் கொண்டிருக்கும் வயலின்கள் பாடல் கேட்பவர்களின் மனங்களை நனைத்துக் கொண்டிருக்க, சில செகன்ட்களே வரும் புல்லாங்குழல் வயலின்களள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பது போல பாடல் கேட்பவர்களின் உள்ளங்களை வசியம் செய்திருக்குக்கும். அங்கிருந்து பாடலின் இரண்டாவது சரணம் தொடங்கும்.

“தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்

பாதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்

வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்

கேளாத வேணு கானம் கிளி பேச்சில் கேட்கக் கூடும்

அடியாளின் ஜீவன் மேவி அதிகாரம் செய்வதென்ன

அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்ன

இசை வீணை வாடுதோ இதமான கைகளை மீட்ட

சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட” என்று பாடலின் இரண்டாவது சரணம், எழுதப்பட்டிருக்கும். பாடல் வரிகளின் கவித்துவம், மேஸ்ட்ரோவின் மெஸ்மரைசிங் இசைக்கோர்ப்பு, ஜேசுதாஸ் உமாரமணன் குரல்களின் வசீகரம் என இந்த பாடல் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் பாடல் கேட்பவர்களின் இரவுகளை தனது இசை வர்ணஜாலத்தால் களவாடியிருப்பார் இசைஞானி.

‘கிராஸ் ரிதம்’: இப்பாடலின் மிக முக்கியமான விசயம் தபேலாவின் தாளநடை. ராஜாவின் பாடல்கள் குறித்தும், இசைக்கோர்ப்புகள் குறித்தும் சிலாகிக்கும் பலர் மறந்துபோவது ஞானியாரின் ரிதம் பேட்டர்ன் பற்றி அதிகம் பேசப்படுவது இல்லை என்ற குறை பலருக்கும் இருக்கவே செய்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இளையராஜாவிடம், எப்படி ஒவ்வொரு பாட்டுக்கும், இதுபோல ரிதம் பேட்டர்ன் வித்தியாசமாக அமைக்கிறீர்கள்? என்று கேட்கப்படும். அதற்கு, வெகு சாதாரணமாக ராஜா சொல்கிறார், அன்றைய தினம் இசைக்கருவி இசைக்க வந்திருக்கும் கலைஞர்களின் இசை திறமையின் அடிப்படையாகக் கொண்டே ரிதம் பேட்டர்னை இறுதி செய்வதாக கூறியிருப்பார் இளையராஜா. இளையராஜாவின் பிரதான தபேலா கலைஞர்களாக இருந்தவர்கள் கண்ணையா மற்றும் பிரசாத். டிரம்மராக இருந்தவர் புரு என்ற புருஷோத்தமன்.

எளிமையான கவிதை நடையில் எழுதப்பட்டு கேட்பதற்கு இனிமையாக இருக்கும் இந்தப் பாடல் மிகவும் சிக்கலான தாள வடிவத்தைக் கொண்டது. இரு வெவ்வேறு தாளங்கள் இந்தப் பாடலில் ஒருங்கிணைந்து பயன்படுத்தப்பட்டிருக்கும். பாடலை பாடுவோர் ஒரு தாளத்தில் பாடிக்கொண்டிருக்க, பின்னணி இசையும், இடையிசையும் வேறு ஒரு தாள காலத்திலும் இருக்கும்.

இப்படி இசைப்பது மிகவும் சவாலான காரியம். இதனை ‘கிராஸ் ரிதம்’ (குறுக்கு தாளம்) என்பர். இதுபோன்ற இசை சவால்களை எல்லாம் டீல் செய்வதில் வல்லவர் இசைஞானி இளையராஜா. ராகங்கள் குறித்தோ, சதுஸ்ரம், ரூபகம், திஸ்ரம் உள்ளிட்ட தாளங்கள் குறித்த அறியாத எண்ணற்ற சாமானியர்களுக்கும் இசையை, அதுவும் கடினமான ராகங்கள், தாளங்களை அடிப்படையாகக் கொண்ட இசையை கொண்டு சேர்த்த பெருமை, ‘இளையராஜா’ என்ற ஒற்றை மந்திரச் சொல்லையே சாரும். ராஜாவின் இசையிரவு நீளும்…..

ஆகாய வெண்ணிலாவே பாடல் இணைப்பு இங்கே

முந்தைய அத்தியாயம்: இளையராஜாவுடன் இசையிரவு 28 | ‘பச்ச மலப்பூவு நீ உச்சி மலத்தேனு …’ – காதோரம் சங்கதி பாடும் லோலாக்கு!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,755FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles