பஹீரா Evaluation: அபத்தம், வக்கிரம், பிற்போக்கு மற்றும் பல! | Prabhu Deva starrer Bagheera film evaluation a problematic crime thriller

‘ஒரே ஒரு நபரை மட்டுமே காதலிக்கும் பெண்தான் நல்ல பெண். தன் வாழ்வில் பல காதலர்களைக் கொண்ட பெண்கள் அனைவரும் கொல்லப்படவும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படவும் உரியவர்கள்’ என்ற உலகமகா கருத்தை சொல்லும் படம் ‘பஹீரா’.

டெடி பியர் மூலம் தொடர்ந்து கொலைகள் அரங்கேற, அலர்ட் ஆகிறது காவல் துறை. குறிப்பாக, ஆண்களை ஏமாற்றுவதாக கூறப்படும் பெண்கள் டெடி பியரால் தேடித் தேடி கொடூரமாக கொல்லப்படுகின்றனர். மற்றொருபுறம் வெவ்வெறு கெட்டப்களில், வெவ்வேறு பெயர்களுடன் சென்னை, மும்பை, ஹைதராபாத்தில் உள்ள நான்கு பெண்களைக் காதலித்து திருமணம் செய்கிறார் ‘பஹீரா’ (பிரபுதேவா). அவர்களைக் கொல்லவும் திட்டமிடுகிறார். இறுதியில், அந்தக் கரடி பொம்மை கொலையாளி யார்? பெண்களை பஹீரா குறிவைக்க காரணம் என்ன? அவருக்கான பின்கதை என்ன? – இவற்றை பல்வேறு படங்களில் சாயல் கலந்து பிற்போக்குத்தனத்துடனும் சோதிக்கும் படம்தான் ஆதிக் ரவிச்சந்திரனின் ‘பஹீரா’.

2023-ல் அழுத்தமான ஒரு ‘பூமர்’ சினிமாவை தன்னால் முடிந்த அளவுக்கான ‘பூமர்’த்தனத்துடன் பெண் வெறுப்பை மட்டுமே முதலீடாக்கி உருவாக்கியிருக்கிறார் ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ பெருங்காவியத்தை கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன். இந்தப் படத்தின் முதல் பாதி ‘மன்மதன்’ படத்தின் சாயலை வாரிக்கொள்ள, கூடவே ‘பஹீரா’ ஆப் மூலமாக ஆண்களுக்கு விடுதலை பெற்று தரும் ஐடியா ‘அந்நியன்’ படத்தை நினைவூட்டுகிறது. கொடூரக் கொலைகள், விகாரமான உருவங்கள், அதீத வன்முறை என எந்த வித சுவாரஸ்யமுமின்றி ‘தேமே’வென கடக்கும் முதல் பாதி கண்ணைக்கட்டுகிறது.

கொலைக்கான காரணங்களை வெளிப்படுத்தும் பின்புலக்கதையும் கிட்டத்தட்ட ‘மன்மதன்’ படத்தையொட்டி இருப்பதால் அதுவுமே அழுத்தமாக இல்லை. பலவீனமான திரைக்கதை, புதுமையற்ற காட்சிகள், பெண் வெறுப்பை மையப்படுத்திய கதையில் இறுதியில் வரும் ‘பட்டுகோட்ட அம்மாளு’ பாடலும் அதற்கான காட்சிகளும் ஆறுதல்.

‘திமிரு பிடிச்ச பொண்ணே திருந்து… திருந்தலன்னா தருவேன் மருந்து’, ‘பொண்ணுங்க சீட்டிங்.. பசங்க க்ரையிங்’ என்ற பாடல் வரிகள் தொடங்கி, “குடிக்கிற பசங்க படிக்க ஆரம்பிச்சுட்டாங்க. படிக்கிற பசங்க குடிக்க ஆரம்பிச்சிட்டாங்க”, “பொண்ணுங்களால தான் பசங்க பைத்தியமா சுத்துறாங்க”, “நல்ல தமிழ்ப் பொண்ணுங்க, புருஷன தவிர யார் தொட்டாலும் கோபப்படுவாங்க”, “ஒரு பொண்ணு ஒரு பையன ஏழு வருஷமா லவ் பண்ணுதா? நம்பவே முடியலயேம்மா” போன்ற பிற்போக்குத்தன வசனங்கள் எரிச்சலூட்டுகின்றன. ‘‘புல்லானாலும் புருஷன் சொல்ற பொண்ணுங்கள இப்போல்லாம் பாக்கவே முடியலையே” என்ற வசனம் மூலம் இயக்குநர் உலகத்துக்கு சொல்லவரும் மகத்தான தத்துவம் என்ன?

ஆதிக் ரவிச்சந்திரன் காட்சிப்படுத்தும் உலகில் ஆண்கள் அனைவரும் புனிதர்கள். எல்லா பெண்களும் ஆண்களை ஏமாற்றவே பிறப்பெடுத்தவர்கள் எனச் சொல்லுவது மட்டுமல்லாமல், “எத்தனை பேர ஏமாத்திருப்ப போ’’ என்று கூறி ஏமாற்றிய பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்ய தகுதியானவர்கள் என காட்சிப்படுத்தப்பட்டிருப்பது வக்கிரத்தின் உச்சம். உண்மையில் கதையில் பிரபுதேவா மட்டும்தான் சைக்கோவா என்ற எண்ணம் இந்த இடத்தில் நமக்கு தோன்றாமல் இல்லை. அன்றாடம் நாடு முழுவதும் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்தும், அண்மையில் ரயில்வே நிலையத்தில் காதலிக்க மறுத்த பெண்ணை காதலன் ஒருவர் தள்ளிவிட்டுக் கொன்றது குறித்தும் இயக்குநருக்கான புரிதல் என்ன?

படத்தில் மற்றொரு ஆறுதல் பிரபுதேவா. இறுதியில் அவர் ‘பட்டுகோட்ட அம்மாளு’ பாடலைப்பாடும் காட்சிகளில் அவரது உடல்மொழியும், நக்கலும், பார்வையற்ற மாற்றுத் திறனாளியாகவும் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். அழுத்தமான ட்ரேட் மார்க் நடனங்களால் ஈர்க்கிறார். அமீரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், காயத்ரி, ஜனனி, சாக்‌ஷி அகர்வால் என நடிகைகள் பட்டாளத்தில், அமீரா தஸ்தூர் கதாபாத்திரமும் நடிப்பும் முதன்மைபடுத்தப்பட்டுள்ளது. சிறப்புத் தோற்றத்தில் ஶ்ரீகாந்த் தனது கதாபாத்திரத்திற்கான பணியைச் சரியாகச் செய்திருக்கிறார். தவிர நாசர், சாய் குமார், கின்னஸ் பக்ரு முதலானவர்களுக்கு பெரிய அளவில் வேலையில்லை.

மொத்தப் படத்திலும் பெண்வெறுப்பு, பிற்போக்குத்தனம், அபத்தமான வசனங்களை வைத்துவிட்டு இறுதியில் மட்டும் ஒரிரு டயலாக்கின் வழியே பெண்களுக்கு ஆதரவாக பேசுவதாகக் கூறி நியாயம் சேர்க்க முயற்சிப்பது அப்பட்டமான ஏமாற்று வேலை. படத்தின் இறுதியில் ‘ஆதிக் ரவிச்சந்திரன் பெயின் கில்லர்’ என பெயர் வருகிறது. அவரின் பெயினுக்கு நம்மை ஏன் கில் பண்ணுகிறார் என்பது புரியவில்லை.

இறுதியாக 25 ஆண்டுகளுக்குப் பிறகு என எதிர்காலத்தைக் காட்டும் காட்சியிலும் கூட பெண்கள் ஏமாற்றுபவர்களாகத்தான் இருக்கிறார்கள் என விளக்கக் காட்சி ஒன்றே போதும் ஆதிக் ரவிச்சந்திரனின் பெயினுக்கு பலியானது பார்வையாளர்கள் மட்டுமல்ல… மொத்த ‘பஹீரா’ படக்குழுவும் என்பது. பிரபஞ்சத்திலுள்ள அனைத்து ஆண்களுக்குமான ஒரே மீட்பரா ‘பஹீரா’ பார்வையாளர்களை நெகட்டிவ் மோடில் பகீரடையச் செய்யும் என்பதில் ஐயமில்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,755FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles