நிஜ வாத்திக்கு 3 லட்சம் வழங்கிய வாத்தி இயக்குனர்
03 மார், 2023 – 13:49 IST
சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் வாத்தி. அரசு பள்ளிக்காக போராடிய ஒரு இளம் ஆசிரியரின் கதை. இதே போன்ற ஒரு போராட்டத்தை ஆந்திராவில் நிஜத்தில் நடத்தியவர் கே.ரெங்கையா. மூடப்பட இருந்து ஒரு அரசு பள்ளிக்கு மாணவர்களை தானே சென்று அழைத்து வந்து படிக்க வைத்து மூடவிடாமல் செய்தவர். இதற்காக அவர் ஜனாதிபதி விருதும் பெற்றிருக்கிறார்.
வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரி, ஆசிரியர் கே.ரங்கையாவை சந்தித்து இந்த படம் குறித்தும் அவரது வாழ்க்கை குறித்தும் உரையாடினார். தன்னுடைய முயற்சிகளுக்காக இளம் வயதிலேயே ஜனாதிபதி விருது பெற்ற ஆசிரியராக இருப்பதுடன் தன்னுடைய சாவர்கேட் கிராமத்தில் உள்ள மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்ததில் ஒரு முக்கிய கருவியாக இருந்திருக்கிறார் கே.ரங்கையா.
இவர் பணியில் சேர்ந்த சமயத்தில் அந்த கிராமத்து பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியில் இருந்தவர் மாறியபோது, மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வரும் பொறுப்பை தானே எடுத்துக்கொள்ள முடிவு செய்ததுடன் அந்தப்பகுதியில் உள்ள தொடர் பிரச்சினைகளுக்கு எதிராக பிரச்சாரங்களையும் நடத்தினார். 13 வருடங்களாக மிகப்பெரிய போராட்டங்களை தான் எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்பதையும் அவர் நினைவுபடுத்தி கூறினார்.
ஆசிரியர் கே.ரங்கையாவின் இந்த முயற்சிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் விதமாகவும் ஒரு நூலகத்தை நிர்மாணிக்கவும் வாத்தி படத்தை தயாரித்த சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் 3 லட்சம் ரூபாய் தொகையை நன்கொடையாக வழங்கினார் இயக்குனர் வெங்கி அட்லூரி.