மூன்று நிமிடங்களில் 184 செல்ஃபிக்கள் எடுத்து நடிகர் அக்ஷய் குமார் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
அக்ஷய் குமார்
பாலிவுட்டில் குறைந்த பட்ஜெட்டில் கியாரண்டி ஹிட் படங்கள் கொடுத்து ப்ராமிஸிங் நடிகர்களுள் ஒருவராக உருவெடுத்தவர் நடிகர் அக்ஷய் குமார். 90களில் ஆக்ஷன் நடிகராக வலம் வரத் தொடங்கி தரமான கமர்ஷியல் ஹிட் படங்கள் கொடுத்து பாலிவுட்டின் முக்கிய நடிகர்களுள் ஒருவராக அக்ஷய் குமார் உருவெடுத்தார்.
தொடர்ந்து ஒரு ஆண்டில் அதிக ஹிட் படங்களை மினிமம் பட்ஜெட்டில் கொடுத்த நடிகர் எனும் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்து ராஜாவாக வலம் வந்த அக்ஷய் குமாரின் சமீபத்திய படங்கள் தொடர் தோல்விகளைத் தழுவி வருகின்றன.
தொடர் தோல்வி
குறிப்பாக 2022ஆம் ஆண்டு இவர் நடித்த பச்சன் பாண்டே, சாம்ராட் பிரித்விராஜ், ரக்ஷா பந்தன், டாம் சேட்டு ஆகிய படங்கள் பெரும் தோல்வியைத் தழுவின. இச்சூழலில் தொடர் தோல்வியிலிருந்து மீள அக்ஷய் குமார் தன் அடுத்த படமான ‘செல்ஃபி’யில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற காமெடி ஜானர் படமான டிரைவிங் லைசன்ஸ் படத்தில் ரீமேக் இதுவாகும்.
செல்ஃபி படம்
இப்படத்துக்காக பாலிவுட்டின் மற்றொரு பிரபல நடிகரான இம்ரான் ஹாஸ்மியுடன் அக்ஷய் குமார் கைக்கோர்த்துள்ளார். இந்நிலையில், இந்தப் படத்துக்காக நடிகர் அக்ஷய் குமார் நிகழ்த்தியுள்ள வித்தியாசமான சாதனை பேசுபொருளாகியுள்ளது. செல்ஃபி படத்துக்கான ப்ரொமோஷன் பணிகளுக்காக முன்னதாக அக்ஷய் குமார் தன் ரசிகர்களை சந்தித்துள்ளார்.
கின்னஸ் சாதனை
அப்போது 3 நிமிடங்களில் மொத்தம் 184 செல்ஃபிக்கள் எடுத்துக் கொண்டு நடிகர் அக்ஷய் குமார் புதிய கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.
முன்னதாக 2018 ஆம் ஆண்டு மூன்று நிமிடங்களில் 168 செல்ஃபிக்களை எடுத்துக் கொண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஜேசன் ஸ்மித் என்பவரும், 2015ஆம் ஆண்டு மூன்று நிமிடங்களில் 105 செல்ஃபிக்களை எடுத்து நடிகர் ட்வைன் ஜான்சனும் இதேபோன்ற சாதனைகளைப் புரிந்தனர்.
#AkshayKumar has at this time damaged the GUINNESS WORLD RECORDS title for the Most self- portrait pictures (#Selfiee) taken in 3 minutes at a meet and greet with followers scheduled in Mumbai, for the promotion of his upcoming film Selfiee releasing on twenty fourth Feb 2023.@akshaykumar pic.twitter.com/TYOJnuLhiH
— Ashwani kumar (@BorntobeAshwani) February 22, 2023
இந்நிலையில் நடிகர் அக்ஷய் குமார் 184 செல்ஃபிக்களை எடுத்து இந்த சாதனைகளை முறியடித்துள்ளார்.
ரசிகர்களுக்கு அர்ப்பணம்
இந்த கின்னஸ் சாதனை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த நடிகர் அக்ஷய் குமார், “இந்த தனித்துவமான உலக சாதனையை முறியடித்து இந்த தருணத்தை எனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நான் இதுவரை சாதித்தவற்றுக்கும், இந்தத் தருணத்தில் நான் இருக்கும் நான் இருக்கும் இடத்துக்கும் எனது ரசிகர்களின் நிபந்தனையற்ற அன்பு மற்றும் ஆதரவே காரணம். எனது முழு வாழ்க்கையிலும் அவர்கள் என்னோடும் எனது பணியோடும் எப்படி நின்றார்கள் என்பதை ஒப்புக்கொள்வதற்காக, அவர்களுக்கான அர்ப்பணிப்பாக இந்த சாதனையை நான் பார்க்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
செல்ஃபி படம் நாளை மறுநாள் (பிப்.24) ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.