Nellai Information: Authorities Come Ahead To Revive The Historic Artwork Of Thool Paavai Koothu Artist Nellai Raju Hopes TNN | பழமையான தோல் பாவை கூத்து கலையை மீட்டெடுக்க அரசு முன்வருமா..?

உயிரில்லாத பாவைகளை வைத்து உயிருள்ள பாத்திரங்களாக காட்டி நிகழ்த்தப்படும் ஒருவகை கூத்துதான் தோல் பாவைக்கூத்து. ஆட்டுத் தோலை பதப்படுத்தி, அதில் வரையப்பட்ட வண்ண சித்திரங்களை, திரைச்சீலைக்கும், பின்னால் உள்ள விளக்கு வெளிச்சத்திற்கும் மத்தியில் அதன் நிழல் தெரியுமாறு ஆட்டியும், அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப பல குரலுடன் வசனங்களை பேசியும், இந்நிகழ்ச்சியை காட்சிப்படுத்துவார்கள். இதற்கு பின்னணி இசையாக ஆர்மோனியம், மிருதங்கம், சால்ரா, காற்சதங்கை போன்ற இசைக்கருவிகள் இசைக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டு கிராமப்புறங்களில்‌ பாவைக்கூத்தின் பிரதான கதை என்றாலே, மக்களுக்கு அறிமுகமான ராமாயணமும் மகாபாரதமும்தான். பத்து தலை ராவணன்‌ ஒவ்வொரு தலையாக வெட்டப்பட்டு வீழும்‌ காட்சி இன்றும்‌ நினைவில் உள்ளது. நிகழ்ச்சியின் இடையிடையே நகைச்சுவைக்காக வரும் கோமாளியை எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மறக்க முடியாது. சினிமா, தொலைக்காட்சி ஆகியவற்றின் வளர்ச்சியை தாண்டி, தற்போது அதிவேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட் போனின் ஆதிக்க காலத்திலும், பழமையான கிராமிய கலைகளில் ஒன்றான பாவைக்கூத்து ஆங்காங்கு நடைபெற்று வருவது ஆச்சரியமான விஷயம்தான்.

திருநெல்வேலியை சேர்ந்த தோல் பாவைக்கூத்து கலைஞரான 74 வயது ராஜூவிடம் கேட்டபோது, “தஞ்சாவூர்தான் யா எனக்கு பூர்வீகம், பொழப்பை தேடி திருநெல்வேலிக்கு குடும்பத்தோடு வந்துட்டேன்.இந்த தொழிலை 4வது தலைமுறையாக நடத்தி கொண்டிருக்கிறோம். பாவைக்கூத்து நடத்துவதற்கு எனது மனைவி கற்பகம், அண்ணன் முத்துச்சாமி ஆகியோர் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். அந்த காலத்தில் நிழல் கூத்துதான் முதலில் இருந்துள்ளது. பிறகு மரப் பாவைகள் மூலமாகவும், தோல் பாவைகள் மூலமாகவும் காட்சி படுத்தப்பட்டு வருகின்றன.

ஆட்டின் தோலை பதப்படுத்தி, ரோமங்கள், கொழுப்புகளை அகற்றி, நாங்களே அதை படங்களாக கத்தரித்து, வர்ணங்களை பூசி கதாபாத்திரங்களாக உருவாக்குவோம். இது கிழியாது. உடையாது. நெருப்போ, தண்ணீரோ படாமல் இருந்தால் எந்த பாதிப்பும் வராது. தேவைப்பட்டால் தைத்து கொள்ளலாம். ஒரு ஆட்டுத் தோலில் இரண்டு படங்கள் செய்யலாம். தற்போது 500க்கும் மேற்பட்ட பாவைகள் எங்களிடம் உள்ளன. கிட்டத்தட்ட 150 ஆண்டு பழமையான பாவைகளையும் பயன்படுத்தி வருகிறோம். ராமாயணம், அரிச்சந்திரா, தசாவதாரம்‌, நல்ல தங்காள்‌, ஞானசவுந்தரி போன்ற புராண கதைகளை நிகழ்த்தி வருகிறோம். அதில் பெயர் பெற்றது ராமாயணம்தான். முன்பெல்லாம் விளக்கெண்ணெய் ஊற்றிய பெரிய பாத்திரத்தில் திரி வைத்து தீபமேற்றி, அந்த வெளிச்சத்தில் பாவைகள் காட்சி படுத்தப்பட்டுள்ளன. அதன் பிறகு பெட்ரோமாக்ஸ் லைட், 100, 500 வாட்ஸ் பல்புகள் பயன்படுத்தப்பட்டன. பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில் நானும் நிகழ்ச்சி நடத்தியுள்ளேன்.

பாவைக்கூத்து நிகழ்ச்சியை பார்க்க முன்பு போல யாருக்கும் பொறுமை கிடையாது. இதனால், இன்றைய காலத்திற்கு தகுந்தாற் போல, டிவி சேனலில் வரும் டோரா, சோட்டாபீம் போன்ற குழந்தைகளுக்கு பிடித்த கார்டூன் கதாபாத்திரங்களையும் காட்சி படுத்துகிறோம். அதுபோல ஓரிரு சினிமா பாடல்களையும் காட்சிக்கேற்ப சம்பந்தப்படுத்தி காட்டுகிறோம். 58 ஆண்டுகளாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். அத்திமரப்பட்டியில் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு நிகழ்ச்சி நடத்தியது ஞாபகம் இருக்கிறது. அப்போதெல்லாம் தொடர்ந்து 10 நாட்கள் நிகழ்ச்சி நடைபெறும். மாதத்துக்கு ஒன்றாவது நடத்தி விடுவோம். இப்போது ஆண்டுக்கொரு நிகழ்ச்சி நடத்துவதே கேள்விக்குறிதான். ஆனாலும், சேலம், கோவை, கும்பகோணம் ஆகிய மாவட்டங்களில் இப்போதும் பாவைக்கூத்து நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கருணாகரன் எனக்கு கலைமுதுமணி பட்டமும், தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி  முத்துச்சுடர் பட்டமும் தந்தார்கள். அதுபோல ஈரோடு கலெக்டர் தந்த தாய்விருது உள்பட பல விருதுகளையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளேன். நலிவுற்ற கலைஞர்களுக்கு அரசு வழங்கும் ரூ 2,000 உதவித் தொகையை பெற்று வருகிறேன். வாடகை வீட்டில் வசித்து வரும் எங்கள் குடும்பத்துக்கு இந்த தொகை போதுமானதாக இல்லை.இதனால், நிறைய பேர் உங்களுக்கு இதெல்லாம் சோறு போடாது. வேறு பிழைப்பை பாருங்க என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், இத்தொழிலை கைவிட மனம் வரவில்லை. அப்படி செய்தால் இந்த கிராமிய கலை  முழுவதுமாக அழிந்து விடும். பாவைக்கூத்து நிகழ்ச்சிக்கு முன்பு போல ஆதரவு இல்லாவிட்டாலும், படித்தவர்கள் பலர் ஆர்வமாக இருப்பதையும், இக்கலை குறித்த விழிப்புணர்வு தற்போதைய இளைஞர்களிடம் துளிர் விட தொடங்கி இருப்பதையும் பார்க்கிறேன். இந்த கலை நிச்சயம் அழியாது” என்கிறார் நம்பிக்கையோடு.
         

இந்த தோல்பாவை கலையை மீட்டெடுக்க விரும்புவோரும், அதை கற்று கொள்ள நினைப்போரும் 9655460948 என்னை எப்போதும் தொடர்பு கொள்ளலாம் எனக்கூறும் இவர், இந்த நவீன காலத்தில் பல கலைகள் அழிந்து விட்ட நிலையில், அழிவின் விளிம்பில் இருக்கும் பழமையான தோல் பாவைக்கூத்து கலையை மீட்க வேண்டியது மிகவும் அவசியம். சாலை பாதுகாப்பு, மதுவின் தீங்கு, பிளாஸ்டிக் தவிர்த்தல், குடிநீர் சிக்கனம், கல்வியின் அவசியம் போன்றவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் இந்த பாவைக்கூத்து நிகழ்ச்சிகளை நடத்த அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்கிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,754FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles