Bigg Boss 6 Tamil Runner Up Vikraman Thanked Who Supported And Voted Him- Watch Video

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் முதன்முறையாக இன்ஸ்டாவில் பேசி விக்ரமன் பகிர்ந்துள்ள வீடியோ அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 

2-ஆம் இடம் பிடித்த விக்ரமன்

நாள்தோறும் சுமார் 30 லட்சம் பேர் வரை பார்த்து ரசிக்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, 105 நாள்களைக் கடந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று முன் தினம் (ஜன.22) அதன் க்ராண் ஃபினாலேவை எட்டியது.

இந்த ரியாலிட்டி ஷோவில் இறுதிவரை சிறப்பாக விளையாடிய விக்ரமன் தான் பிக் பாஸ் டைட்டிலை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் குறைவான வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தது அவரது ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

சின்னத்திரை நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், பத்திரிகையாளர், அரசியல் என பல துறைகளிலும் பயணித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடியெடுத்து வைத்த விக்ரமன், தொடக்கம் முதலே தன் கனிவான பண்பாலும் தெளிவான பேச்சாலும் கவனம் ஈர்த்தார்.

மக்கள் மனங்களை வென்றவர்!

விளையாட்டில் சுய மரியாதையை இழுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது, கண்ணியம் பேண வேண்டும்,  என்பது தொடங்கி, எப்படிப்பட்ட சண்டைகளிலும் தன்னிலை மறக்காமல், சரியான கருத்துகளை உரக்கச் சொல்லி தன் கொள்கைகளை சமரசம் செய்து கொள்ளாமல் மக்களின் குட் புக்ஸில் இடம்பெற்றார் விக்ரமன்.

ஆனால் இறுதியில் நூலிழையில் டைட்டிலை தவறவிட்டு இரண்டாம் இடம்பிடித்தது அவரது ரசிகர்களை அதிருப்தியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.

மேலும் பிக் பாஸில் தொடக்கம் முதலே கட்டுப்பாடின்றி கோபத்தை வெளிப்படுத்தி, வாராவாரம் கமல் அறிவுரை சொல்லுமளவுக்கு நெகட்டிவ் இமேஜை முன்னிறுத்தி விளையாடி வந்த அஸீம் டைட்டில் வென்றது நெட்டிசன்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதிருப்தியில் ரசிகர்கள்

பிக்பாஸில் வரலாற்றுப் பிழை, பாய்காட் விஜய் டிவி, தீமை தான் வெல்லும் என்றெல்லாம் நேற்று மாலை முதலே தங்கள் அதிருப்தியை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி பொங்கித் தீர்த்தனர்.

மேலும் அறம் வெல்லும் என அழுத்தமாகக்கூறி நேர்மையை முன்னிறுத்தி விளையாடிய விக்ரமன் வெற்றி பெறாதது இணையதளத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், நிகழ்ச்சித் தொகுப்பாளர் கமல் வரை நெட்டிசன்களின் வசவுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின் முதன்முறையாக விக்ரமன் தன் ரசிகர்களுடன் உரையாடும் வகையில் வீடியோ பகிர்ந்து உற்சாகப்படுத்தியுள்ளார்.

முதல் வீடியோ… நெகிழ்ந்த விக்ரமன்!

”வணக்கம், உங்க எல்லாருக்கும் நான் மிகப்பெரிய நன்றிய சொல்லிக்கறேன். நீங்க எல்லாரும் எவ்வளவு ஆதரவு காமிச்சிங்கனு வீட்டுக்குள்ள இருந்து வெளிய வந்ததுக்கு அப்புறம் தான் என்னால உணர முடிஞ்சது.

அவ்வளவு அன்பும் ஆதவும் ரொம்ப ஆர்கானிக்கா, தன்னெழுச்சியா எந்த எதிர்பார்ப்பும் இல்லாம காமிச்சிருக்கிங்க. அதுக்கு மிகப்பெரிய  நன்றி. பொங்கல் அன்னைக்கு உங்க வீட்டு வாசல்கள்ல போட்ட கோலத்துல ’அறம் வெல்லும்’ இடம்பெற்றிருக்கு. இதவிட பெரிய வெற்றி வேற என்ன நீங்க எனக்கு கொடுத்துட முடியும்?

நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன். உங்களுடைய அன்புக்கு மிகப்பெரிய வெற்றிய நான் தெரிவிச்சிக்க கடமைப்பட்டிருக்கேன். இருந்தாலும் உங்க மனநிலை என்னனு தெரியுது.

நாம பேசுவோம். இந்த வீடியோ நன்றி தெரிவிக்கறதுக்காக மட்டுமல்ல. நான் உங்க எல்லாரையும் சந்திக்கணும்னு ஆசைப்படறேன். அந்த மீட் எங்க, எப்படிங்கறத நான் அதிகாரப்பூர்வமா தெரிவிக்கறேன். மறுபடியும் சொல்றேன்…. உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. அறம் வெல்லும்!” எனப் பேசியுள்ளார் விக்ரமன். 


இன்ஸ்டாவில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று லைக்ஸ் அள்ளி வருகிறது. 

பிக் பாஸில் கடந்து வந்த பாதை!

முதல் சீசனில் பங்குபெற்ற காயத்ரி ரகுராம் இந்நிகழ்ச்சிக்கு பின்னரே அரசியலில் நுழைந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த விக்ரமன் அரசியல் பின்புலம் கொண்ட ஒரு நபராக முதன்முறையாக பிக் பாஸில் நுழைந்தார்.

இந்நிலையில், விக்ரமன் எப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியை கையாளப்போகிறார் என்ற ஆர்வம் மக்களிடையே  எழுந்தது. ஆனால் முதல் வாரத்தில் இருந்தே அறம், கண்ணியம் ஆகிய விஷயங்களை அழுத்தமாக முன்னிறுத்தி தன் விளையாட்டை நேர்மையாக விளையாடினார் விக்ரமன். ஆரியுடன் ஒப்பிட்டு முதலில் இவரை ரசிக்கத் தொடங்கினர் ரசிகர்கள். ஆனால் நாளடைவில் இவரது தனித்துவமான கேம் ப்ளேவால் பிக் பாஸ் ரசிகர்களின் மனங்களை வெல்லத் தொடங்கினார்.

ஒரு கட்டத்தில் விக்ரம் Vs அஸீம் என மாறிய விளையாட்டு அனல் பறக்கத் தொடங்கியது. பிக் பாஸ் வீட்டிலுள்ள அனைவருடன் சரமாரியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அனைவரிடமும் நல்ல நட்பையும் கொண்டிருந்தார் விக்ரமன்.

டாஸ்க்குகளிலும் முழு ஈடுபாடு காண்பித்து தன் அட்டகாசமான கேம்ப்ளேவால் ஒரு கட்டத்தில் சமூக வலைதள சென்சேஷனாக மாறிய விக்ரமன், ஷிவினுடனான அவரது நட்பால் பெரிதும் ரசிக்கப்பட்டார்.

அறிவுரை சொல்லும் காரணத்துக்காகவும், வார்த்தைக்கு வார்த்தை பொலிட்டிகல் கரெக்ட்னஸ் பார்ப்பதற்காகவும் இன்றைய தலைமுறையினரால் பல இடங்களில் பூமர் என கேலி செய்யப்பட்டாலும், தனக்கான ரசிகர் பட்டாளத்தை அப்படியே தக்கவைத்து இறுதி வாரம் வரை வெற்றிகரமாக பயணித்துள்ளார் விக்ரமன்.

’அறம் வெல்லும்’

இறுதி வாரத்தில் விசிக தலைவரும் எம்பியுமான தொல். திருமாவளவன் தொடங்கி ஆதரவு ட்வீட்கள் குவிந்த நிலையில், விக்ரமன் டைட்டில் வெல்வார் என்றே நெட்டிசன்கள் ஆரூடம் சொல்லி வந்தனர். ஆனால் இறுதியில் நூலிழையில் டைட்டிலை தவறவிட்ட விக்ரமன், இரண்டாம் இடம் பிடித்துள்ளது ரசிகர்களை அதிருப்தியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

விக்ரமன் ஜெயிப்பது சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் என அமுதவாணன் உள்ளிட்ட சக போட்டியாளர்கள் தொடங்கி அவரது ரசிகர்கள் வரை எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் “போராட்ட குணம் கொண்ட நான், காலம் முழுவதும் போராடுவேன். அறம் வெல்லும்” என்பதை மீண்டும் அழுத்தமாகக் கூறி மக்கள் மனங்களை வென்று விடைபெற்றுள்ளார் விக்ரமன்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles