இயக்குநர் ரிஷப் ஷெட்டி காந்தாரா 2 படத்துக்கான கதையை எழுதி வருகிறார்
கன்னட இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த படம் ‘காந்தாரா’. கடந்தாண்டு செப்டம்பர் 30-ம் தேதி கன்னடத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பின் காரணமாக பான் இந்தியா முறையில் வெளியிடப்பட்டது. ரூ.16 கோடியில் உருவான இப்படம் ரூ.450 கோடி வரை வசூலித்து பிரமாண்ட சாதனையை படைத்தது.
இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார் ‘காந்தாரா’ படத்தை தயாரித்த ஹோம்பேல் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர். தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “ரிஷப் ஷெட்டி காந்தாரா 2 படத்துக்கான கதையை எழுதி வருகிறார். இரண்டாம் பாகத்திற்காக கடந்த இரண்டு மாதங்களாக கர்நாடக மாநில காடுகளுக்குச் சென்று ஆராய்ச்சி நடத்தியும் வருகிறார்.
முதல்கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இரண்டாம் பாகம் வெளியாகலாம். ஆனால், இது காந்தாரா படத்தின் சீக்குவல் (sequel) கிடையாது. மாறாக ப்ரீக்குவலாக (prequel) இருக்கும். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் அதிக பொருட்செலவில் எடுக்கப்படும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.