இளையராஜாவுடன் இசையிரவு 26 | ‘மல்லிகையே மல்லிகையே தூதாக போ…’ – கட்டிப்போடும் தபேலாவின் தாளநடை! | Ilayarajavudan Isai Iravu : Malligaiye Malligaiye thoothaga po Tune

ராகதேவனின் இசைப்பயணம் 1990களை எட்டியிருந்த காலக்கட்டம் அது. 90-களின் தொடக்கத்தில் இருந்தே பல புதிய இயக்குநர்களின் வரவைக் கண்டிருந்தது தமிழ் சினிமா. அந்தநேரத்தில் படுபிசியாக இருந்த நடிகர்கள் கார்த்திக், பிரபு, சத்யராஜ், ராமராஜன் போன்றவர்களின் திரைப்படங்களுக்கும் அந்த காலக்கட்டத்தில் அறிமுகமான பல புதிய நடிகர்களின் திரைப்படங்களுக்கும் இசையமைத்திருந்தார் இசைஞானி இளையராஜா. இதில் நடிகர் கார்த்திக்கின் பல வெற்றித் திரைப்படங்களுக்கு ராஜாவின் இசை பக்கபலமாக இருந்துவந்தது.

தென் மாவட்ட விசேஷங்களான திருவிழா, காதுகுத்து, கல்யாணம், கிடாவெட்டு உள்ளிட்ட வைபவங்கள், திண்டுக்கல், மதுரை, தேனி,விருதுநகர், திருநெல்வேலி சுற்றுவட்டார அரசுப் பேருந்துகள், மின் பஸ்களின் பயணங்கள் இசைஞானியின் இசையில் வெளிவந்த நடிகர் கார்த்திக்கின் திரைப்பட பாடல்கள் இல்லாமல் நிறைவு பெறாது. நடிகர் கார்த்திக்கின் பல திரைப்படங்கள் தென் மாவட்ட மண் சார்ந்த திரைப்படங்களாகவும், கிராமத்துப் பின்னணியை கதைக்களமாகவும் கொண்டிருந்ததால் அத்திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் மக்களின் மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக இருந்தன.

கடந்த 1990-ம் ஆண்டு இயக்குநர் என்.கே.விஸ்வநாதன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ‘பெரிய வீட்டு பண்ணக்காரன்’ . இந்த திரைப்படத்தில் வெளிவந்த எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட் ரகம். அதிலும் கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் சித்ரா ஆகியோர் இணைந்து பாடியிருக்கும் ‘மல்லிகையே மல்லிகையே தூதாக போ பாடல்’ ஆல்டைம் பேஃவரைட் ரிபீட் மோடு ரகம். 32 ஆண்டுகளுக்குப் பின்னரும், இன்றளவும் எஃப்எம்களில் குறைந்தபட்சம் ஒருமுறையாவது நேயர் விருப்பப் பாடல்களாக கேட்கப்படும் பாடலாக இருக்கக்கூடியது. இந்தப் பாடலை கவிஞர் நா.காமராசன் எழுதியிருக்கிறார். பாடல் வரிகளில் ஒரு அழகான காதல் கவிதையை விவரித்திருப்பார்.

இப்பாடலின் தொடக்க இசையில் மிகப் பெரிய அருவிகளுக்கு மலைகளின் உச்சியிலிருந்து இடைநில்லாமல் தங்குதடையின்றி வந்து கொண்டிருக்கும் தெளிந்த நீரோட்டத்தை வயலின்களின் கம்பிகளின் ஊடே வழிந்தோடச் செய்திருப்பார் இசைஞானி. ஒரு பம்பரம் ரொங்குவதைப் போல அந்த தொடக்க இசை பாடல் கேட்பவர்களை கிறங்கடித்துவிடும். பின் உச்சியிலிருந்து கீழ்நோக்கி பூமழையாய் கொட்டும் அருவியின் குளுமையாய் ஆஆஆஆஆ என்ற கோரஸ் வழியே உள்ளங்களை நனைத்திருக்கும், இசைஞானி மேலிருந்து கொட்டிய தண்ணீர் உச்சந்தலைக்குள் புகுந்து இதயத்துக்குள் நுழையும் சுகத்தை பாடலின் பல்லவி தொடங்குவதற்கு முன்வரும் அந்த கணபொழுது இடைவெளியில் வரும் புல்லாங்குழலின் இசையில் கொடுத்திருப்பார். அங்கிருந்து தொடங்கும் சித்ராவின் குரலில் இப்பாடலின் பல்லவி.

“மல்லிகையே மல்லிகையே

தூதாக போ

துள்ளி வரும் தென்றலையே

நீ சேர்த்து போ

நோய் கொண்டு நான்

சிறு நூலாகிறேன்

தேயாமலே

பிறை போல் ஆகிறேன்

தாங்காது

இனி தாங்காது” என பாடாலாசிரியர் நா.காமராசனின் இந்த பல்லவி வரிகள் தலைவனை நினைத்துருகும் தலைவியின் ஆழ்மனது ஏக்கங்களை எளிமையான சொற்களால் வார்த்திருப்பார். இதனைத்தொடர்ந்து கிடார், கீபோர்ட் முதல் சரணத்துக்கு முன்வரும் இடையிசையை ஆக்கிரமித்துக் கொள்ள அமைதியாக பேக்கப்பில் வயலின்கள் அலைபோல் மிதந்தோடிக் கொண்டிருக்கும். அப்போது தனி ஆவர்த்தனமாய் வந்துசேரும் புல்லாங்குழலோடு இணைசேரும் தருணத்தில் வயலின்கள் மீண்டும் உயிர்பெறும். பின் குழலும் வயலினும் மாறிமாறி நடத்தும் கொஞ்சல்கள் பாடல் கேட்பவர்களின் நெஞ்சை அள்ளும். அங்கிருந்து ஜேசுதாஸ் பாடலின் முதல் சரணத்தை தொடங்குவார்.

“சந்திரனும் சுட்டது இங்கே

சந்தனமும் போனது எங்கே

ஒத்தையிலே நிக்குறேன் கண்ணே

நித்திரையும் கெட்டது பெண்ணே

மணிக்குயில் பாடும்

குரல் கேட்டு வருவாயா

தனிமையில் வந்து

ஒன்று கேட்டால் தருவாயா

மீண்டும் மீண்டும் நீ

அதை கேட்டுப் பாரம்மா” என தலைவியை நினைத்து தலைவன் பாடுவது போலவும், தலைவியின் கேள்விக்கும் தலைவன் பதில் கூறுவதைப் போலவும் இப்பாடலின் முதல் சரணம் எழுதப்பட்டிருக்கும்.

மரக்குச்சிகளின் நாதத்திலிருந்து இப்பாடலின் இரண்டாவது சரணத்துக்கு முன்வரும் இடையிசையை தொடங்கியிருப்பார் இளையராஜா. அதைத்தொடர்ந்து

“தன தந்த தன தந்த

தன தந்த தன தந்த

நான் நானா நானா” கோரஸை பயன்படுத்தியிருக்கும் ராகதேவன் கோரஸின் ஊடே வரும் புல்லாங்குழல் இசையை பாடல் கேட்பவர்களுக்கு தேனில் குழைத்துக் கொடுத்திருப்பார். பின் ஆர்ப்பரிக்கும் வயலின்களின் பேக்கப்பில் கிடார் சேர்த்து இமைகளை மூடி ரசிக்கவைத்து, இரண்டாவது சரணம் தொடங்குவதற்கு முன்வரும் கடுகளவு இடைவெளிக்குள் புல்லாங்குழல் இசையை தும்பிகளைப் போல இதயத்துக்குள் பறக்கச் செய்து, பாடலின் இரண்டாவது சரணத்துக்குக் கூட்டிச் செல்வார் ஞானதேவன் இளையராஜா.

“என் மனசு என்னிடம் இல்லை

ராத்திரியில் எத்தனை தொல்லை

செண்பகமும் மல்லிகை மொட்டும்

வந்து வந்து வாட்டுது என்னை

கனவுகள் போலே

கண்ணில் நீயே வரும் நேரம்

மனதினில் பாலும்

இன்ப தேனும் கலைந்தோடும்

ஆடி பாட தான்

வரும் ஆசை தேறுமே” இந்த வரிகளை விளக்க வேண்டியதே இல்லை, காதல் கொள்ளும் எல்லா உயிர்களையும் கேட்ட மாத்திரத்திரத்தில் ஈர்க்கும் பொருள் பொதிந்தவை.

இந்தப் பாடல் முழுக்கவே தபேலாவின் தாளநடை பாடல் கேட்பவர்களை வெகுவாக கவர்ந்திருக்கும். முதல் மற்றும் இரண்டாவது சரணங்களில் தபேலாவின் தாளலயத்தில் மூன்று சேஞ்ச் ஓவர் செய்துகாட்டி பாடலுக்கு மெருகேற்றியிருப்பார் ராகதேவன். ராஜாவின் நாதகீதம் நாளும் நீளும்….

மல்லிகையே மல்லிகையே தூதாக போ பாடல் இணைப்பு இங்கே

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,681FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles