குஜராத் கலவரம், பிரதமர் மோடி தொடர்பாக பிரிட்டனில் ஒளிபரப்பப்பட்ட ஆவணப்படத்துக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
2002 குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடித் தொடர்பு உள்ளதாக பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 59 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, குஜராத்தில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 790 முஸ்லிம்கள், 254 ஹிந்துக்கள் கொல்லப்பட்டதாகவும், 223 பேர் காணவில்லை என்றும் 2,500 பேர் படுகாயமடைந்ததாகவும் 2005ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குஜராத் கலவரம் புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகளைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தில் பேசியுள்ள ஒருவர், கலவரத்துக்கு அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிதான் காரணம் என சுட்டிக்காட்டுகிறார்.
குஜராத் கலவரம் தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு அளித்த அறிக்கையும் ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குஜராத் கலவரம் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்றும் ஆவணப்படத்துக்கு நேர்காணல் அளித்த இந்திய அரசியல் ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். அந்த அறிக்கையில், கலவரத்தின்போது முஸ்லிம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், இந்துகள் வசிக்கும் பகுதிகளில் இருந்து முஸ்லீம்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கலவரம் தொடர்பாக நரேந்திர மோடி ஊடகத்துக்கு அளித்த நேர்காணல்களையும், அந்த காலகட்டத்தில் மக்களிடம் மேற்கொண்ட பிரசாரங்களையும் தொகுத்து ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
Watch shortly earlier than it’s taken down from YouTube!
BBC documentary on Modi, notably on his position within the 2002 ethnic cleaning pogrom in Gujarat https://t.co/m8CzuqgpTb
— Prashant Bhushan (@pbhushan1) January 19, 2023
இந்த ஆவணப்படத்தை பார்த்த மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த படம் இணையதளத்திலிருந்து எடுப்பதற்கு முன் அனைவரும் பாருங்கள் என குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார். ஆனால் தற்போது அந்த படம் இணையத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆவணப்படத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதால் இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவிக்கையில், “பிரதமர் மோடி குறித்த இந்த ஆவணப்படம் அதை உருவாக்கிய ஏஜென்சியின் கருத்தாகும். இந்த ஆவணப்படம் முழுவதும் முழுக்க முழுக்க பாராபட்சம் மற்றும் காலனித்துவ மனப்பான்மை கொண்டதாக இருக்கிறது. இத்தகைய திரைப்படத்தை ஏற்றுக்கொள்ள முடியாது” என தெரிவித்தார்.