பி.எம். கிஸான் திட்டத்தின் 13வது தவணைத் தொகையை விடுவிக்க வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பது அவசியம் என வேளாண்துறை தெரிவித்துள்ளது.

மத்திய அரசால் விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் நான்கு மாதத்திற்கு ரூ 2,000 வீதம் ஆண்டுக்கு ரூ 6,000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்திஅன் 13வது தொகையினை விடுவிக்க வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என வேளாண்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது எனக் கூறும் விவசாயிகள் அதனை சேவை மையத்திலோ அல்லது பி.எம். கிஸான் வலைதளப்பக்கத்திலோ சரி பார்த்துக்கொள்ளலாம் என அறிவுருத்தப்பட்டுள்ளது.

இது குறித்து வேளாண்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

”தமிழ்நாட்டில் “பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி’’ திட்டமானது 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக நான்கு மாதத்திற்கு ஒரு முறை தலா ரூ.2000/- வீதம் மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000/- விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இத்திட்டத்தின்கீழ் இணைந்த பயனாளிகளுக்கு 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.

<sturdy>அடுத்து 13 ஆவது தவணை பெறுவதற்கு ஆதார் எண் இணைப்பு அவசியம்</sturdy>

தற்போது டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரையிலான காலத்திற்கு 13 ஆவது தவணைத் தொகையை ஜனவரி மாத இறுதியில் விடுவிப்பதற்காக ஒன்றிய அரசு ஆயத்த பணிகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்த (e-KYC), வங்கிக்கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த பயனாளிகளுக்கு மட்டுமே இத்தவணைத் தொகை வழங்கப்படும் என ஒன்றிய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.

<sturdy>ஆதார் எண் இணைப்புக்கு தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை</sturdy>

தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளில் 8,84,120 பயனாளிகள் தங்களது ஆதார் எண்ணை இன்னும் உறுதி செய்யாமல் இருந்தனர். எனவே, ஆதார் எண்ணை உறுதி செய்யாத பயனாளிகளும் தொடர்ந்து இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, வேளாண்மை உழவர் நலத் துறையானது கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அஞ்சல் துறை மற்றும் பொது சேவை மையத்துடன் இணைந்து கிராமம் வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தி, வீடுவீடாக சென்று ஆதார் எண்ணை (e-KYC) உறுதி செய்வதன் அவசியம் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

மேலும், நாளிதழ்களில் தொடர்ந்து செய்திகள் வெளியிடப்பட்டு இத்திட்ட பயனாளிகள் ஆதார் எண்ணை (e-KYC) உறுதி செய்யக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகளின் விளைவாக, இதுவரை, 5,27,934 தகுதியான பயனாளிகளின் ஆதார் எண் உறுதி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 3,56,186 தகுதியான பயனாளிகளுக்கும் ஆதார் எண்ணை(e-KYC) உறுதி செய்திடும் பணி வேளாண்மை-உழவர் நலத்துறை அலுவலர்கள் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

<sturdy>ஆதார் எண்ணை எவ்வாறு உறுதி செய்யலாம் </sturdy><sturdy>?</sturdy>

<sturdy> </sturdy>பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை (e-KYC) உறுதி செய்யாத பயனாளிகள் இருமுறைகளில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.<sturdy> </sturdy>அருகிலுள்ள பொது சேவை மையத்திற்குச் சென்று, உங்கள் கைரேகையை பதிவு செய்தோ அல்லது தங்கள் இருப்பிடத்திலிருந்தபடியே, பி.எம்.கிசான் வலைதளத்திற்கு சென்று ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசியில் பெறப்படும் நான்கு இலக்க எண்ணை (OTP) உள்ளீடு செய்தோ உங்களது ஆதார் எண்ணை உறுதி செய்திடலாம்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து தகுதியுள்ள பயனாளிகளும் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்கு சென்று தங்களது வங்கிக்கணக்கோடு ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுதொடர்பாக சந்தேகம் ஏதும் இருந்தால், உங்கள் வட்டார வேளாண் உதவி இயக்குநரை அணுகலாம்.

<sturdy>ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள பிஎம் கிசான் திட்டத்தில் தமிழ்நாட்டு விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் பயன்பெற வேண்டும் என்பதற்காக வேளாண்மை-உழவர் நலத்துறை எடுத்துவரும் இம்முயற்சிக்கு இத்திட்டப் பயனாளிகள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அரசு கேட்டுக்கொள்கிறது”. </sturdy>

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.