ரஜினி முதல் விஜய் வரை.. முன்னணி நடிகர்களின் மேடைப் பேச்சுகளும், சர்ச்சைகளும்! ஓர் அலசல்

‘என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய ரசிகர்களே’ என ரஜினி கூறும் ஒற்றை வரியில் அரங்கமே அதிரும்…

‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ எனத் தொடங்கும் வார்த்தைகளில் விஜய்யின் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பை காண முடியும்.

இந்த மேடைப் பேச்சுகள் எல்லாம் வெறும் வார்த்தைகள் அல்ல, தமிழ் சினிமா ரசிகர்களின் உணர்வுடன் கலந்துவிட்ட எமோஷன் எனலாம்…

சினிமாவைப் போலவே ஹீரோக்கள் பேசும் வசனங்களுக்கும், பஞ்ச் டயலாக்குகளுக்கும் பொதுத்தளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துவிடும். அவர்களின் ஒவ்வொரு வார்த்தைகளும், அசைவுகளும் ஏன் உடல்மொழி கூட ரசிகர்களால் உற்றுநோக்கப்படும். ஹீரோக்களின் மேடைப் பேச்சுகள் வெறும் வார்த்தைகளாக மட்டுமே ஒலித்து ஓய்ந்துவிடாமல் ரசிகர்களின் ஆழ் மனதுக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதன் வீச்சையும், அதிர்வுகளையும், எதிர்வினையையும் சமூகவலைதளங்களில் காண முடியும்.

மாஸ் ஹீரோக்கள் பெரும்பாலும் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்காமல் தவிர்த்துவிடுவார்கள். அந்த விமர்சனங்கள் எல்லை மீறிச் செல்லும் சூழலில் கூட, அதற்கு தன் படங்களில் பஞ்ச் வசனங்கள் மூலமோ, பாடல் வரிகள் மூலமோ பதிலளிக்கும் வழக்கத்தைப் பார்த்திருப்போம். ஆனால் அண்மைக் காலமாக ஒரு புது ட்ரெண்ட் உருவாகியிருக்கிறது. அதுதான் ஆடியோ வெளியீட்டு விழா. பாடல்களை பிரபலப்படுத்துவதற்காகவும், படத்தின் ப்ரமோஷனுக்காகவும் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆடியோ வெளியீட்டு விழா நடத்தப்படும். ஆனால், அந்த விழாக்கள் எல்லாம் ஹீரோக்களின் மறைமுக அரசியல் விழாவாக மாறிக் கொண்டிருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

image

அண்மையில் நடந்த ‘வாரிசு’ ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சுக்கு எழுந்திருக்கும் விமர்சனங்கள், அந்த கேள்விகளுக்கு வலு சேர்த்துள்ளன. ஆடியோ விழாவில் ‘வாரிசைப்’ பற்றி என்ன அப்டேட் கிடைக்கப்போகிறது என்பதைக் கடந்து, விஜய்யின் குட்டிக் கதைக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. விழாவில் கலந்து கொண்ட விஜய், வழக்கமான ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்களுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்து உற்சாகப்படுத்தினார்.

அவரின் குட்டிக் கதை ஏரியாவுக்கு வந்தபோது, தன் தொடக்க கால சினிமா வாழ்வைப் பற்றிய நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். 90 காலகட்டத்தில் தனக்கு ஒரு போட்டியாளர் இருந்ததாக கூறினார் விஜய். அவர் தனக்கு கடும் போட்டியாக மாறியபோது தான் கூடுதல் வேகத்துடன் ஓட வேண்டிய இருந்ததாகச் சொன்னார். இடைநில்லா அந்த ஓட்டமும், உழைப்பும்தான் தனக்கு வெற்றியைக் கொடுத்ததாக கூறினார். அந்தப் போட்டியாளர் யாராக இருக்கும்? விஜய் யாரைப் பற்றி சொல்லப்போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த சூழல், அந்த போட்டியாளரின் பெயர் ஜோசஃப் விஜய் எனக் கூறி அரங்கத்தை கைதட்டல்களால் அதிரச் செய்தார். அப்படி உங்கள் ஒவ்வொருக்குள்ளும் ஒரு போட்டியாளர் இருக்கிறார், உங்களின் போட்டியாளர் நீங்கள்தான் என்றார் விஜய்.. இது ஒரு மோட்டிவேஷ்னல் ஸ்டோரி என்றாலும், இதன் பின்னால் விஜய்யின் ஸ்டேட்மெண்ட் உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

அது ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பேசிய விவகாரத்துடன் ஒப்பிடப்படுகிறது. தமிழில் விஜய்தான் நம்பர் 1 ஹீரோ என்றார், தில் ராஜு.. இதனால், தமிழ் சினிமாவில் நம்பர் 1 ஹீரோ யார்? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக அலசி ஆராயப்பட்டது. அப்போது அஜித்தான் நம்பர் ஒன் என அவரின் ரசிகர்கள் டிஜிட்டல் யுத்தத்தை நடத்தத் தொடங்கினார்கள். தனக்கு போட்டியாளர் தாம் தான் எனக்கூறியதன் பின்னணியில், அஜித் தனக்கு போட்டியாளர் கிடையாது என்ற மறைமுக அர்த்தம் உள்ளதாக ஒரு கருத்தும் எழுந்துள்ளது.

image

இந்த நம்பர் 1 சர்ச்சைகளை எல்லாம் கடந்து, இந்த மேடை அரசியல் சினிமாவில் புது ட்ரெண்ட் ஆகியிருக்கிறது. ஹீரோக்கள் தன் மீதான விமர்சனங்களுக்கு சமூக வலைதளங்களிலோ அல்லது ஊடகங்கள் வாயிலாகவோ பதில் சொல்லாமல், சினிமா மேடையையே பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்ற பார்வை முன்வைக்கப்படுகிறது.

இன்று விஜய்.. இன்று வரை ரஜினி

விஜய்க்கு முன்னதாகவே மேடை பேச்சில் மெசேஜ் கொடுத்து ஊடகங்களை பரபரப்பாக்கும் முக்கிய ஹீரோ, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கதைகள் மூலம் கவனம் ஈர்ப்பதில் ரஜினி ஒரு கில்லாடி. இந்த விஷயத்தில் அவர் விஜய்க்கு முன்னோடி என்றே சொல்லலாம். ‘பாபா’ படத்தின் தோல்வியைத் தொடர்ந்து ரஜினியின் திரைவாழ்வு குறித்த நெகடிவ் விமர்சனங்கள் அதிகம் எழுந்தன. அது எல்லை கடந்தபோதும் அமைதி காத்த ரஜினிகாந்த், ‘சந்திரமுகி’ திரைப்பட விழாவில் மவுனம் கலைத்தார்..

‘பாபா’ படம் சரியாக போகாததால் தான் ஆடிப்போய்விட்டதாக சிலர் நினைக்கிறார்கள். தான் யானை அல்ல குதிரை, யானை விழுந்தால் எழுந்துகொள்ள நேரம் எடுக்கும், தான் குதிரை என்பதால் உடனே எழுந்து கொண்டதாக கூறி ரசிகர்களுக்கு எனர்ஜி கொடுத்தார், ரஜினி. வெற்றிடத்தை நிரப்ப வருகிறேன் என அரசியல் கருத்துகளைக் துணிவாக கூறியதிலும் சரி, அதே மேடையில் தனக்கு நடிக்கத் தெரியாது எனக்கூறி பணிவாக பேசுவதிலும் சரி ரஜினிக்கு நிகர் ரஜினி மட்டுமே.

image

இந்த வரிசையில் அஜித்தும் ஒருவர்!

இவ்வரிசையில் ‘துணிவு’ நாயகன் அஜித்தும் மேடைப் பேச்சுகளால் சர்ச்சை ஏற்படுத்திய பிரபலங்களில் ஒருவர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் இருந்த காலம் அது. அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில் திரையுல நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய அஜித், அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் சொல்லி நடிகர்கள் மிரட்டப்படுகிறார் என பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அரசியல் ரீதியான பிரச்னைகளுக்கு நடிகர்கள் வந்து போராட வேண்டுமென மிரட்டுகிறார்கள், ஆனால் நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் எதிர்க்கிறார்கள் என விமர்சனங்களை அடுக்கினார், அஜித். நடிகர்கள் மீதான மிரட்டலுக்கு முதலமைச்சர்தான் தீர்வு தர வேண்டுமென அவர் கருணாநிதியைப் பார்த்து சொன்னபோது அரங்கமே ஆடிப்போய்விட்டது. அஜித்தின் அந்த பேச்சுக்கு ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டியது பரபரப்பாக பேசப்பட்டது.

image

படவிழாவில் கண்ணீர் சிந்திய சிவகார்த்திகேயன்!

இதேபோன்றதொரு மிரட்டலை சந்தித்ததால் படவிழாவில் கண்ணீர் சிந்தி கதறியவர், நடிகர் சிவகார்த்திகேயன். படத்துக்குப் படம் அவரின் இமேஜும், சம்பளமும் அதிகரித்துக் கொண்டே சென்றதைப் போல், அவருக்கு எதிரான பிரச்னைகளும் அதிகரித்தன. ‘ரெமோ’ படத்தின் ப்ரமோஷன் விழாவில் ஆதங்கத்துடன் பேசிய சிவகார்த்திகேயன், படத் தயாரிப்பாளருக்கு பல நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். இன்னும் எவ்வளவு பிரச்னைகள்தான் கொடுப்பீர்கள் என ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பிய அவர், மேடையிலேயே கண்ணீர் சிந்தினார். இந்த மிரட்டலின் பின்னணியில் சில முக்கிய பிரபலங்கள் இருப்பதாக வெளியான தகவல் எல்லம் தனிக்கதை.

image

கோயில்.. மருத்துவமனை – வைரலான ஜோதிகா பேச்சு

இவ்வரிசையில், பொதுமேடையில் சொன்ன தனிப்பட்ட கருத்துக்காக விமர்சனங்களை சந்தித்தவர், நடிகை ஜோதிகா. சில ஆண்டுகளுக்குமுன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஜோதிகா, தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். சென்னையில் படப்பிடிப்புக்காக தஞ்சை சென்றபோது, பெரியக் கோயிலையும், அரசு மருத்துவமனையும் பார்க்க நேர்ந்ததாகக் கூறினார். பொதுமருத்துவமனையில் நிலை மோசமாக இருப்பதாக கூறிய அவர், கோயில்களைப் போல மருத்துவமனைகளையும் கூடுதல் கவனத்துடன் பராமரிக்க வேண்டும் என்றார்.. அவரின் இக்கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல விமர்சனங்கள் எழுந்தன.

image

பாறைகளை வெட்டுகிறார்கள் – விஜய் சேதுபதி

இதேபோல், பொது மேடையில் சமூக பிரச்னைகளைப் பேசி விவாதமாக்கியவர், நடிகர் விஜய் சேதுபதி. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், தேனியில் படப்பிடிப்பு சென்ற அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அங்குள்ள பெரும் மலையில் உள்ள பாறைகள், அளவுக்கு மீறி வெட்டி எடுக்கப்பட்டிருப்பதாகவும், இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டுமென அவர் பேசியது, அப்போதைய ஹாட் டாபிக் ஆனது.

இப்படி, இன்னும் சில நடிகர்களின் மேடைப்பேச்சுகளையும் குறிப்பிடலாம். சினிமாவைக் கடந்து பொதுத்தளங்களில் புகழ் வெளிச்சத்தில் இருக்கும் திரை நட்சத்திரங்கள், தங்களது வார்த்தைகளின் வீச்சை ப்ரமோஷனுக்காக மட்டும் பயன்படுத்தாமல் பொதுநலனுக்காகவும் பயன்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

– பாலாஜி

Supply : WWW.TAMILFUNZONE.COM

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,681FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles