‘பாபா’ திரைப்படத்தின் மறுவெளியீட்டுக்கான பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள காட்சிகளுக்கு மட்டும் ரஜினிகாந்த் டப்பிங் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ‘பாபா’. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். ‘அண்ணாமலை’, ‘வீரா’, ‘பாட்ஷா’ படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக ‘பாபா’ படத்தை இயக்கினார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, ரியாஸ்கான், எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.
தற்போது இந்தப் படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது. இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தப் படம் புதிதாக மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளதாம். நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளதாம். மேலும் ‘மாயா மாயா ‘, ‘சக்தி கொடு’, ‘கிச்சு கிச்சு’ என ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் புதிதாகவே ரீமிக்ஸ் செய்யப்பட்டு டால்பி மிக்ஸ் ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளதாம். படத்திற்கான சிறப்பு சப்தங்களும் கூட இன்னும் விறுவிறுப்பு கூட்டப்பட்டுள்ளனவாம்.
இந்நிலையில் இன்று படத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள காட்சிகளுக்கு மட்டும் நடிகர் ரஜினி மீண்டும் டப்பிங் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த படம், ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.