கோவை புலியகுளம் பகுதியில் 2 பேர் ஒரே அறையில் அமர்ந்து பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்ட மாநகராட்சி கழிவறை கட்டுமானம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சி உட்பட்ட 70 வது வார்டு ராஜீவ் காந்தி நகர். இப்பகுதியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஒரு பொதுக் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இந்த கழிப்பறையானது பெண்கள் மற்றும் ஆண்கள் பயன்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறையின் ஒரு பகுதியில் இரண்டு பேர் அருகருகே அமர்ந்து பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள கட்டுமானம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரே அறைக்குள் 2 கழிவறைகள் அருகருகே அமைக்கப்பட்டுள்ள நிலையில், கழிவறைக்கு இடையிலே கதவுகளோ அல்லது தடுப்புகளோ கட்டப்படாமல் உள்ளது.
இரண்டு பேர் அடுத்தடுத்து அமரும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த கழிவறை கதவுகள் இல்லாமல் கட்டப்பட்டு இருப்பதால், ஒரே நேரத்தில் இருவர் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். முறையான திட்டமிடல் இல்லாமல் கழிவறை கட்டப்பட்டு இருப்பதாகவும், கதவு அல்லது தடுப்பு அமைக்கப்பட்டு இருந்தால் ஒரே நேரத்தில் இரண்டு பேர் பயன்படுத்தும் வகையில் இருந்திருக்கும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இரண்டு பேர் பயன்படுத்தும் வகையில் கழிவறையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர கோவை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் ஒரே அறையில் இரு கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த கழிப்பறை மாநகராட்சி நிர்வாகத்தால் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்கள் கிண்டலான கருத்துக்களை பகிர்ந்து மாநகராட்சி நிர்வாகத்தை விமர்சித்து வருகின்றனர். சினிமா படங்களின் நகைச்சுவை வசனங்களுடன் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனிடையே இந்த கழிவறை விவகாரம் தொடர்பாக கோவை மாநகராட்சி மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் விளக்கம் அளித்துள்ளார். அதில் “இந்த கழிவறை தற்போது பயன்பாட்டில் இல்லை. விரைவில் சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : முதல்வர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பதிவு – அதிமுக ஐடி விங்க் நிர்வாகி கைது
Watch Video : கோவையில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த யானை; உணவுப் பொருட்களை ருசி பார்த்த காட்சிகள்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google Information -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
பேஸ்புக் பக்கத்தில் தொடர
யூடியூபில் வீடியோக்களை காண