‘என் அண்ணன், தங்கை இருவரும் என் அப்பா, அம்மா எனக்கு கொடுத்த கிஃப்ட்’ என நெகிழ்ச்சியுடன் பேசிய நடிகர் கார்த்தி, ‘விருமன்’ படப்பிடிப்பின்போது பள்ளி ஒன்றை சீரமைத்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.
முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி, அதிதி சங்கர் நடித்துள்ள படம் ‘விருமன்’. ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கார்த்தி, ”விருமன் படத்திற்கு வரவேற்பு கிடைக்குமா என்ற பயம் எனக்குள் இருந்தது. ட்ரெய்லர் வந்த பிறகு அந்த பயம் உடைந்துவிட்டது.
கிராமத்துப் படங்களுக்கான வரவேற்பை மக்கள் கொடுக்க தவறுவதில்லை என்பதை புரிந்துகொண்டேன். கிராமத்துப் படங்களில் தான் நமது காலசாரத்தைப் பார்க்க முடியும். ‘பருத்திவீரன்’ படத்தின் சாயலை ‘விருமன்’ படத்தை தவிர்க்க நிறைய மெனக்கெட்டேன். பொதுவாக ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசங்களைக் காட்ட விரும்புபவன் நான்.
கிராமத்தில் தான் வாழ்க்கை இருக்கிறது. அது அழகான வாழ்க்கை. கிராமத்து கதாபாத்திரத்தில் நடிப்பது சுகமானது. நான் அமெரிக்காவிலிருந்து வந்ததும் குடும்பத்துக்காக தான். வாழ்க்கையில் உறவுகள் முக்கியமானது. யுவனிடம் கிராமத்து சவுண்ட் இல்லாமல் மாற்றிக்கொடுங்கள் என்றேன். ‘கஞ்சாப்பூ கண்ணால’ பாடலில் சித் ஸ்ரீராமை பாட வைத்தபோதே அவர் அதை உடைத்தார்.
படத்தில் எல்லாரும் சிறப்பான நடிப்பைப் பதிவு செய்துள்ளனர். ‘விருமன்’ குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கக் கூடிய படமாக இருக்கும் என நம்புகிறேன். எனக்கு உடம்பு சரியில்லாதபோது என் தங்கை தனது குடும்பத்தைக்கூட கவனிக்காமல் என்னை வந்துப் பார்த்தார். என் மனைவிக்கு உடல்நலம் சரியில்லாதபோது அவரது தம்பி வந்திருந்தார். அப்படி எனக்கு என் அண்ணன் மற்றும் தங்கை இருவரும் என் அப்பா, அம்மா எனக்கு கொடுத்த கிஃப்ட்.
நாங்கள் ஷூட்டிங்கில் இருந்தபோது, வயதானவர்கள் வந்தார்கள். பக்கத்தில் ஒரு பள்ளியிருக்கிறது வந்த பாருங்கள் என்றனர். போய் பார்க்கும்போது மிகவும் மோசமான நிலையில் அந்தப் பள்ளி இருந்தது. உடனே அந்தப் பள்ளியை சீரமைக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதை சரிசெய்தோம். இப்போது அங்கே குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை அகரம் மட்டும் செய்யவில்லை. அங்கிருக்கும் நிறைய பேர் உதவி செய்திருக்கிறார்கள். அந்தந்த பகுதியில் இருக்கும் செல்வந்தர்கள் நிறைய பேர் சிதிலமடைந்த பள்ளிகளுக்கு உதவ முன்வரவேண்டும்” என்றார்.