தெருக்குரல் அறிவின் குற்றச்சாட்டுக்கு நீண்ட அறிக்கையில் விளக்கம் கொடுத்த சந்தோஷ் நாரயணன்!

‘என்ஜாயி எஞ்சாமி’ பாடல் குறித்து தெருக்குரல் அறிவின் குற்றச்சாட்டு பதிவுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், கடந்த மாதம் 28-ம் தேதி சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. அதில் ஒரு பகுதியாக சந்தோஷ் நாரயணன் தயாரிப்பில், தீ மற்றும் தெருக்குரல் அறிவு பாடி, நடித்து, யூட்யூப் தளத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘என்ஜாயி எஞ்சாமி’ பாடலை தீ மற்றும் கிடாக்குழி மாரியம்மாள் பாடியிருந்தார்கள். அப்போது இந்தப்பாடலை எழுதி, அதில் நடித்திருந்த தெருக்குரல் அறிவு இடம்பெறாதது சர்ச்சையை கிளப்பியநிலையில், அவர் அமெரிக்கா சென்று இருந்ததால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தெருக்குரல் அறிவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘என்ஜாயி எஞ்சாமி’ பாடலை நானே இசையமைத்து, எழுதி, பாடி, நடித்திருந்தேன். யாரும் எனக்கு ஒரு டியூனையோ, மெலடியையோ அல்லது ஒரு வார்த்தையோ எழுதி கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட 6 மாதங்கள் தூக்கமில்லாமல், மன அழுத்தம் நிறைந்த இரவுகளையும் பகலையும் இந்த பாடலுக்காக செலவழித்து உழைத்துள்ளேன். இது அனைவரும் சேர்ந்து செய்த கூட்டு முயற்சிதான், அதில் சந்தேகமில்லை. நீங்கள் உறங்கும் போது உங்கள் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் அபகரிக்கலாம். நீங்கள் விழித்திருக்கும் போது ஒருபோதும் உங்களிடம் இருப்பதை யாராலும் பறித்துவிட முடியாது. உண்மை எப்போதும் வெல்லும்” என பதிவிட்டிருந்தார்.

image

இந்நிலையில் சந்தோஷ் நாராயணன் இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எனது அன்பான ரசகிர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் குடும்பத்தினருக்கு வணக்கம். நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க நான் பிரார்த்திக்கிறேன். கடந்த 2012-ம் ஆண்டு நான் இசையமைத்து வெளியான எனது முதல் படம் முதல் இன்றுவரை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நீங்கள் தொடர்ந்து தரும் பேராதரவிற்கு நன்றியுடன் இருப்பேன். நான் இப்போது வேறு மொழியில் தனிப்பட்ட இசை சார்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இதில்தான் என் முழு கவனத்தையும் நேரத்தையும் கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு செலவிட்டு வருகிறேன்.

‘என்ஜாயி எஞ்சாமி’ பாடலுடனான எனது பயணத்தைப் பற்றிக் கூற விரும்புகிறேன். கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில் நமது வரலாற்றையும் இயற்கையும் கொண்டாடும் விதமாக தமிழில் ஒரு பாடலை உருவாக்கும் யோசனையை என்னிடம் தீ சொன்னார். அதன் பிறகு நான் இசையமைத்து, பதிவுசெய்து ‘என்ஜாயி எஞ்சாமி’ பாடலை இணைந்துப் பாடினேன். மேலே கூறப்பட்ட என்னுடைய பணியானது உலகளவில் ‘தயாரிப்பாளர்’ என்று குறிப்பிடப்படுகிறது.

image

உலக அளவில் தனிப் பாடல்களை உருவாக்குபவர்கள் அப்படித்தான் குறிப்பிடுவார்கள் என்பதை இந்தத் துறை சார்ந்த பலரும் ஏற்கெனவே அறிவர். நான், தீ மற்றும் அறிவு ஆகிய மூன்று பேரும் ஒருவொருக்கொருவர் கொண்டுள்ள அன்பிற்காகவும், தனிப்பாடல்கள் மேல் எங்களுக்கு உள்ள காதலாலும் இந்தப்பாடலுக்கு ஒன்றாக இணைந்தோம். இந்தப் பாடலுக்கு பாடி, நடிக்க மட்டுமே ஒருவர் செய்யக்கூடாது என்றும், அனைவருமே தங்களது பங்களிப்பை அதாவது எழுதுவது, இசையமைப்பது என பணிகளை மேற்கொள்ள வேண்டும் முடிவுசெய்து ஒத்துக்கொண்டோம்.

தீ மற்றும் அறிவு பாடலைப் பாட ஒப்புக்கொண்டனர். இருவரும் சேர்ந்து பாடலுக்காகவும் பணியாற்றினர். தீயின் பல வரிகளுக்கு அவரே இசையமைத்தார். அறிவு பாடல் வரிகள் எழுத ஒப்புக்கொண்டார். நான் மீதி இசையையும், அறிவு பகுதிக்கான ட்யூனையும் கம்போஸ் செய்தேன். இந்தப் பாடலுக்கான அடித்தளத்தை மிக நுட்பமாகத் தேர்ந்தெடுத்து, பாடலுக்கான ஓட்டத்தையும், திரைக்கதையையும் உருவாக்கியவர் இயக்குநர் மணிகண்டன். பல நிஜ வாழ்க்கை சம்பவங்களைக் கூறி, அறிவுடன் பல மணி நேரம் செலவழித்த இயக்குநர் மணிகண்டனுக்கு (காக்கா முட்டை, கடைசி விவசாயி) எங்கள் குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘என்ஜாயி எஞ்சாமி’ பாடல் அவரது அற்புதமான திரைப்படமான ‘கடைசி விவசாயி’ படத்தின் பாதிப்பில் உருவானது.

image

இந்தப் பாடலில் வரும் பல ஒப்பாரி வரிகள் அரக்கோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பாட்டிகள் மற்றும் தாத்தாக்களின் பங்களிப்பில் உருவானது. அவர்களின் பணியை பெருமைப்படுத்திய அறிவுக்கு நன்றி. `பந்தலுல பாவக்கா’ பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாரம்பரிய ஒப்பாரி பாடல்களில் ஒன்று. ரகிட ரகிட, அம்மா நானா, என்னடி மாயாவி போன்ற எனது பல பாடல்களைப் போலவே, நான் இசையமைக்கும் பாடலில் நானே சில வார்த்தைகளைப் பயன்படுத்துவேன். இந்தப் பாடலில் ‘என்ஜாயி எஞ்சாமி’யும் அப்படிப்பட்ட ஒன்றுதான். ‘என்ஜாயி எஞ்சாமி’ பாடலை சுற்றி ஒரு அற்புதமான கதையை அறிவு உருவாக்கியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்தப்பாடலின் அனைத்து வரிகளுடன் படப்பிடிப்பின் சிந்தனை, ஏற்பாடு மற்றும் பதிவு செய்யும் முறை ஒரு 30 மணி நேரத்திற்குள் உருவாக்கப்பட்டது. படப்பிடிப்பிற்கு முன்பு ‘என்ஜாயி எஞ்சாமி’ பாடலை பதிவு செய்ய சில மணிநேரங்களே இருந்ததால், எங்களின் பணி வேகமாகவும், வேடிக்கையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. இந்தப்பாடலின் வருமானம் மற்றும் உரிமை அனைத்தும் தீ, அறிவு மற்றும் நான் ஆகிய 3 பேரும் சமமாகப் பகிர்ந்துள்ளோம் என்பதில் நான் வெளிப்படையாக இருக்க விரும்புகிறேன்.

நான் கலைஞர்கள் பக்கம் பாரபட்சமின்றி இருக்க விரும்பியே பாடலுக்கான பங்களிப்பாளர்களாக தீ மற்றும் அறிவு ஆகிய இருவரின் பெயரை எல்லா தளங்களிலும் குறிப்பிட்டேன். ‘என்ஜாயி எஞ்சாமி’ ஆடியோ வெளியீட்டு விழாவில் அறிவு பற்றிய எனது பேச்சே அதற்கு சாட்சி. செஸ் ஒலிம்பியாட் 2022-ல் தீ மற்றும் கிடாக்குழி மாரியம்மாளின் ‘என்ஜாயி எஞ்சாமி’நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, அறிவு அப்போது வெளிநாட்டில் இருந்ததால் அவரால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. மேலும் அவரது தற்போதைய அமெரிக்க பயணத்திட்டம் காரணமாக அவர் கலந்து கொள்ள முடியாது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடமும் தெரிவித்திருக்கிறார்.

image

அறிவு ஒரு அற்புதமான கலைஞன் என்பதை நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அறிவிடம் எனக்கு மிகவும் பிடித்த படைப்பு வெற்றிமாறன் தயாரிக்கும் ‘அனேல் மேல் பனித்துளி’ திரைப்படத்தில் இருந்து விரைவில் வெளிவரவிருக்கும் ‘கீச்சே கீச்சே’ பாடல் தான். இதில் நான் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளேன். ‘என்ஜாயி எஞ்சாமி’ பாடலுக்கு கொடுத்த அதே வரவேற்பை ‘கீச்சே கீச்சே’ பாடலுக்கும் கொடுத்தால் அது கலைஞனாக அறிவுக்குப் பொருத்தமாக இருக்கும்.

நான் எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுப்பதற்காக எனது தளத்தைப் பயன்படுத்துகிறேன். எனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கலை இரண்டுமே அதற்குச் சான்றாகும். எனது வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் நாங்கள் பின்பற்றும் தொழில் நெறிமுறை, கலாசாரம் மற்றும் தோழமை ஆகியவை அனைவரும் அறிந்த ஒன்றே. கலையின் மீதும், நம் நாட்டில் உள்ள அனைத்து அற்புதமான கலைஞர்களின் மீதும் மட்டுமே அன்பு கொண்டிருங்கள், வரும் மாதங்களில் உலகளவில் பல புதிய தமிழ்க் குரல்களின் எழுச்சியைக் காண்போம்.

இந்தப் பாடல் உருவாக உதவியாக இருந்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. இந்தச் சிறப்பு பாடலில் ஈடுபட்டுள்ள எவருடனும் பொது அல்லது தனிப்பட்ட விவாதத்திற்கு நான் முற்றிலும் தயாராக இருக்கிறேன். மேலும் எனது குறிக்கோள் என்னவெனில் கலைகளை உருவாக்கி மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே. என்றும் அன்புடன் சந்தோஷ் நாரயணன்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Supply : WWW.TAMILFUNZONE.COM

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,871FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles