“எனக்கு உலகை காட்டிவிட்டு, அவர் சென்றுவிட்டார்” – ‘அய்யப்பனும் கோஷியும்’ நஞ்சியம்மா பின்னணி | Ayyappanum koshiyum fame najiyammal gained nationwide award

மலையாளத்தின் வெற்றிபெற்ற திரைக்கதையாசிரியர்களில் ஒருவர் சச்சி. அவரை இயக்குநராகவும் வெற்றிபெறச் செய்த படம், ‘அய்யப்பனும் கோஷியும்’. பிஜுமேனனும் பிருத்விராஜ் சுகுமாரனும் அய்யப்பனும் கோஷியுமாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் ”களக்காத்த சந்தனமேரம் வெகுவாக பூத்திருக்” என்ற பாடலை பாடிய நஞ்சியம்மாவுக்கு சிறந்த பின்னணி பாடகர் (பெண்) பிரிவில் தேசிய விருது கிடைத்துள்ளது.

தமிழகம் – கேரள எல்லையான அட்டப்பாடியை சேர்ந்தவர் நஞ்சியம்மா. தமிழகப் பழங்குடியான இவருக்கு தாய் மொழி தமிழே. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி கேரள வசம் சென்றது. இதனால், அட்டப்பாடி தமிழகப் பழங்குடி மக்களின் மொழி மெல்ல மாறத் தொடங்கியது. தலைமுறைகள் மாற மாற மலையாள மொழியை தாய்மொழியாக கொண்டு எழுதவும் படிக்கவும் செய்தனர்.

எனினும், அவர்களின் பேச்சு வழக்கு மொழியில் தமிழின் மணம் இன்றும் உண்டு. அதற்கு நஞ்சியம்மா பாடிய “களக்காத்த சந்தனமேரம் வெகுவாக பூத்திருக்கு..” பாடலே சாட்சி. அட்டப்பாடி வனத்தில் வாழும் கிராமிய மக்களின் நாட்டார் பாடலே இந்த பாடல். கேட்பதற்கு மலையாள பாடல் போல் இருந்தாலும், உன்னிப்பாக கவனித்தால் இது தமிழ் பாடல் என்பதை அறியலாம். அட்டப்பாடி வனத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த நஞ்சியம்மா தனது இட்டுக்கட்டில் நாட்டார் பாடல்களை பாடுவதை வழக்கமாக கொண்டவர்.

அவரை கண்டறிந்து பொதுவெளியில் அவரின் பாடலை கேட்கவைத்தது ஒரு ஆவணப்பட இயக்குநர். ஆம், அயப்பனும் கோஷியும் படத்தில் பாடுவதற்கு முன்பாகவே சிந்து சாஜன் என்ற பெண் இயக்குநர் இயக்கிய அகுடு நாயக (மாத்ரு மொழி) என்ற ஆவணப்படத்தில் ஒருபாடல் நஞ்சியம்மா பாடியுள்ளார். எனினும், “களக்காத்த சந்தனமேரம் வெகுவாக பூத்திருக்கு..” பாடலே அவரை உலக அரங்கில் வெளிச்சம் போட்டு காட்டியது. இதற்கு முழு காரணம் இயக்குநர் சச்சியும், இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய்யும். மறைந்த இயக்குநர் சச்சி நஞ்சியம்மாவின் பாடல் இடம்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.

இதற்கு ஒரு உதாரணம். அதுவரை வெளியுலகை காணாத நஞ்சியம்மா திரையில் நடிப்பதற்கும் பாடுவதற்கும் அஞ்சி, பாடல் பிடிக்கவில்லை என்றால் என்னை விட்டுவிடுங்கள் என்று படத்தின் ஆரம்பத்திலேயே சச்சியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவரை விடாத சச்சி, “இதில் பாடு, நிச்சயம் உனக்கான வழி பிறக்கும்” என்று வற்புறுத்தி நஞ்சியம்மாவை பாட வைத்துள்ளார். சச்சிக்காக நஞ்சியம்மா ஒத்துக்கொண்டு, தமிழில் வார்த்தைகளும் உச்சரிப்பில் மலையாளமும் கலந்த “களக்காத்த” பாடலை பாட உலகெங்கும் இந்தக் குரல் கரோனா காலகட்டத்தில் ஒலித்தது. குழந்தைகளுக்கு வானத்தை காட்டி சோறூட்டும்போது பாடப்படும் பாடலே இது. இந்த மெட்டு நஞ்சியம்மாவின் முன்னோர்களுக்கு சொந்தமானது என்பதை அவரே ஒருபேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போதுள்ள சினிமா நடசத்திரங்களும் சரி, திரை அனுபவமும் சரி பெரிதாக பரிட்சயம் இல்லாமல் அட்டப்பாடி வனங்களில் பாடி கொண்டிருந்த நஞ்சியம்மாவுக்கு இன்று தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தருணத்தில் மறைந்த இயக்குநர் சச்சியை நியாபகப்படுத்தி உணர்ச்சிவசப்பட பேசியுள்ளார் நஞ்சியம்மா. மலையாள ஊடகம் ஒன்றுக்கு பேசிய அவர், “அறியப்படாத ஒரு மனுஷி நான். ஆடு மாடு மேய்ப்பது என பல தொழில் செய்துகொண்டிருந்த என்னை, வெளியுலகுக்கு கொண்டுபோய் காட்டியது இயக்குநர் சச்சி சார் மட்டுமே. நாட்டு மக்கள் சந்தோஷமாக எனக்கு வரவேற்பு கொடுத்ததுடன், வெளியுலகை அறியவும் செய்தார்கள். ஆனால், உலகத்தை எனக்கு காட்டிய சச்சி சார் இன்று இந்த உலகத்தில் இல்லை. அவருக்கு வேண்டி இந்த விருதை நான் பெறுவேன்.

அறிந்தோ, அறியாமலோ இந்தப் படத்தில் என்னை இணைக்க வைத்தது அவர் தான். அனைவரும் ஒருநாள் இறக்க வேண்டியவர்கள் தான். இன்று சச்சி சார் இருந்திருந்தால் நான் விருது வாங்குவதை நினைத்து பெருமைப்பட்டிருப்பார். இறந்தாலும் அவரை நான் பார்த்துக்கொண்டுள்ளேன். விருது கிடைத்ததில் சந்தோஷமே. நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த சந்தோஷம் கிடைக்க வேண்டும்” என்று பேசியுள்ளார் நஞ்சியம்மா.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,505FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles