”இந்த நிமிஷம் எனக்கு ராணுவத்தில் அனுமதி கிடைத்தால், அனைத்தையும் விட்டு ராணுவத்தில் சேருவேன். தேசமே தெய்வம்” என்று ‘சதுரங்க வேட்டை’ புகழ் நடிகர் நட்டி என்னும் நடராஜன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான விஜயின் ‘யூத்’ திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாவனர் நடராஜன் சுப்ரமணியம். நட்டி என அழைக்கப்படும் இவர் ‘ப்ளாக் ஃப்ரைடே’, ‘ஜப் வி மேட்’, ‘ராஞ்சனா’ உள்ளிட்ட பல்வேறு ஹந்தி படங்களிலும், மலையாளம், தெலுங்கு படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இதனிடையே, ‘நாளை’, ‘சக்கரவியூகம்’, ‘முத்துக்கு முத்தாக’ ‘சதுரங்க வேட்டை’, அண்மையில் வெளியான ‘கர்ணன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இருப்பினும், ‘சதுரங்க வேட்டை’ திரைப்படம் இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே பரவலான அடையாளத்தைப் பெற்றுதந்தது.
இந்நிலையில், தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்துக்கு நெட்டிசன்கள் பலரும் கமென்ட் செய்து வருகின்றனர். 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் பணியாற்ற வழிவகை செய்யும் மத்திய அரசின் திட்டமான ‘அக்னி பாதை’ திட்டம் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், இது குறித்து நட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்த நிமிஷம் எனக்கு ராணுவத்தில் அனுமதி கிடைத்தால், அனைத்தையும் விட்டு ராணுவத்தில் சேருவேன்… தேசமே தெய்வம்” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு அவரது முந்தைய படமான ‘சதுரங்க வேட்டை’ படத்தின் காட்சியின் டெம்ப்ளேட்டான, ‘ஒருத்தன ஏமாத்தணும்னா அவன் ஆசைய தூண்டனும்’ என நெட்டிசன் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். பலரும் சதுரங்க வேட்டை படத்தில் பொய் சொல்லி ஏமாற்றும் காட்சிகளுக்கான டெம்ப்ளேட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிமிஷம் எனக்கு ராணுவத்தில் அனுமதி கிடைத்தால், அனைத்தையும் விட்டு ராணுவத்தில் சேருவேன்..தேசமே தெய்வம்..