இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்தி நடிக்கும் ‘1947 ஆகஸ்ட் 16’ என்ற படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக இருந்த என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்தி நடிக்கும் படம் ‘1947 ஆகஸ்ட் 16’. அறிமுக நாயகி ரேவதி நடிக்கும் இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து ‘பர்பில் புல் எண்டர்டெயின்ட்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது.
இந்திய சுதந்திரப் போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, துணிச்சலான வீரன் ஒருவன் பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து போரிடும் கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் படம் தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறுகையில், ”1947- ஆகஸ்ட் 16” என்ற இந்த படம் இதயத்தை தொடும் ஒரு நேர்மையான கதை. மனதை அசைத்து பார்க்கும் அற்புதமான படைப்பு. இந்தக் கதையை உருவாக்க வேண்டிய கட்டாயத்தை கதையே ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை நீங்கள் ஒருமுறை பார்த்தால் என்றென்றும் அது உங்கள் மனதில் நிலைத்து இருக்கும்” என்றார்.
இயக்குநர் பொன்குமார் கூறுகையில், ”இது சுதந்திரப் போராட்டக் கதையல்ல, ‘சுதந்திரம் என்றால் என்ன?’ என்பதை புரிந்து கொள்ளும் அப்பாவி கிராம மக்கள் கூட்டம் பற்றிய கதை. அவர்களில் ஒருவர் தான் கதாநாயகன், எப்பொழுதும் ஆக்ரோஷமும் கோபமும் கொண்டவர். இந்தக் கதாப்பாத்திரங்களைச் சுற்றிச் சுழலும் இந்த கதை, உணர்வுபூர்வமான தருணங்களுடன், அழுத்தமான திரைக்கதையுடனும் உருவாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.